குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் அதிகாரிகள் முன் மண்பானைகளை விவசாயிகள் உடைத்ததால் பரபரப்பு கலெக்டர் எச்சரிக்கை செய்தார்

திருச்சியில் நடந்த விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் அதிகாரிகள் முன் விவசாயிகள் பானைகளை உடைத்தனர். அவர்களுக்கு கலெக்டர் எச்சரிக்கை விடுத்தார்.
குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் அதிகாரிகள் முன் மண்பானைகளை விவசாயிகள் உடைத்ததால் பரபரப்பு கலெக்டர் எச்சரிக்கை செய்தார்
Published on

திருச்சி,

குறைதீர்க்கும் நாள் கூட்டம் திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று விவசாயிகள் மாதாந்திர குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது. மாவட்ட கலெக்டர் கே.எஸ். பழனிசாமி தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அதிகாரி தர்ப்பகராஜ், மாவட்ட வேளாண் இணை இயக்குனர் உதுமான் முகைதீன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (விவசாயம்) சாந்தி, தோட்டக்கலை துறை துணை இயக்குனர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர். மண்பானையுடன் வந்த விவசாயிகள் கூட்டம் தொடங்கியதும் தமிழக ஏரி மற்றும் ஆற்றுப்பாசன விவசாயிகள் சங்க தலைவர் விசுவநாதன் தலைமையில் சில விவசாயிகள் கையில் மண்பானையை சுமந்தபடி அதிகாரிகள் முன் வந்து நின்று கொண்டிருந்தனர். அவர்கள் காவிரி தண்ணீரும் வரவில்லை, மழையும் இல்லை, இதனால் விவசாயமும் நடைபெறவில்லை. வறட்சியை தாங்க முடியாமல் 300க்கும் மேற்பட்ட விவசாயிகள் இறந்து உள்ளனர். வறட்சி நிவாரணம் ஏமாற்றம் அளிக்கிறது. அதனால் விவசாயிகளின் நிலைமை மண்பானையை போன்று தான் உள்ளது என்று கூறினார்கள்.

போட்டு உடைத்தனர்

பின்னர் அவர்கள் திடீர் என கையில் வைத்து இருந்த மண்பானைகளை கீழே போட்டு டமார் என உடைத்தனர். அதிகாரிகள் முன் தரையில் விழுந்த அந்த மண்பானைகள் சுக்கு நூறாக உடைந்து சிதறியது. இந்த சம்பவம் அந்த அரங்கில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பானைகள் உடைக்கப்பட்ட சத்தத்தை கேட்டு வெளியில் நின்று கொண்டிருந்த உளவு துறை போலீசாரும் உள்ளே ஓடிவந்தனர்.

கலெக்டர் எச்சரிக்கை

தங்களது முன்னால் பானைகள் உடைக்கப்பட்டதை கண்டு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். கலெக்டர் பழனிசாமி இதுபோன்ற செயல்களை யாரும் செய்ய வேண்டாம். விவசாயிகள் தங்களது உணர்வுகளை வெளிப்படுத்த வாடிய பயிர்களை எடுத்து வரலாம். அதற்கு பதிலாக இதுபோன்ற பொருட்களை கொண்டு வந்து பிரச்சினை செய்யக்கூடாது. இனி இதுபோன்று யாராவது நடந்து கொண்டால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை செய்தார். இதனை தொடர்ந்து பானைகளை உடைத்த விவசாயிகள் வெளிநடப்பு செய்தனர். அதிகாரிகள் முன் பானைகளை போட்டு உடைத்த சம்பவத்தை பார்த்த மற்ற விவசாய சங்க தலைவர்கள் இதுபோன்ற அநாகரீக செயல்களில் ஈடுபடக்கூடாது என கண்டித்து பேசியதோடு, அதற்காக வருத்தமும் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com