120 ஏக்கர் ஏரி நிலம் மீட்பு

திருச்சி அருகே 30 ஆண்டுகாலமாக ஆக்கிரமிப்பில் இருந்த 120 ஏக்கர் நிலத்தை ஐகோர்ட்டு கிளை உத்தரவின்பேரில் அதிகாரிகள் நேற்று மீட்டனர்.
120 ஏக்கர் ஏரி நிலம் மீட்பு
Published on

திருவெறும்பூர், மார்ச். 23-
திருச்சி அருகே 30 ஆண்டுகாலமாக ஆக்கிரமிப்பில் இருந்த 120 ஏக்கர் நிலத்தை ஐகோர்ட்டு கிளை உத்தரவின்பேரில் அதிகாரிகள் நேற்று மீட்டனர்.
நிலத்தை ஆக்கிரமித்து விவசாயம்
திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் தாலுகாவுக்குட்பட்டதிருநெடுங்குளம் கிராமத்தில் தேவராயநேரி உட்கிராமத்தில் பொதுப்பணித்துறை மற்றும் நீர்வள ஆதாரத்துறையால் பராமரிக்கப்படும் ஏரி உள்ளது. இந்த ஏரியின் மொத்த பரப்பளவு 265 ஏக்கர் ஆகும். இந்த ஏரிக்கு உய்யகொண்டான் வாய்க்கால் மூலம் நீர் ஆதாரம் இருக்கிறது.
இதன் மூலம் சுமார் 550-க்கும் மேற்பட்ட ஏக்கர் பரப்பளவில் விவசாயம் செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் தேவராயநேரி கிராம ஏரியை புதுக்குடி, திருவிழா பட்டி, தேவராய நேரி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 90-க்கும் மேற்பட்டோர் சுமார் 120 ஏக்கர் பரப்பளவில் கடந்த 30 ஆண்டுகளாக ஆக்கிரமித்து விவசாயம் செய்து வந்தனர். மேலும் தேவராயநேரி நரிக்குறவர் காலனிபகுதியை சேர்ந்த மக்களுக்கு சுமார் 10 ஏக்கர் நிலம் தி.மு.க. ஆட்சி காலத்தில் குடியிருக்க பட்டா போட்டு வழங்கப்பட்டுள்ளது.
மதுரை ஐகோர்ட்டில் வழக்கு
இந்த நிலையில் ஏரி நிலத்தில் ஆக்கிரமித்து விவசாயம் செய்வதை தடுத்து அங்குள்ள ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்க வேண்டி தேவராயநேரியை சேர்ந்த கருப்பசாமி, ஐகோர்ட்டு மதுரை கிளையில் கடந்த 2021-ம் ஆண்டு பொது நல வழக்கு தொடர்ந்தார். அதன் அடிப்படையில், ஏற்கனவே நீர்நிலைகளை ஆக்கிரமிக்கக்கூடாது என ஐகோர்ட்டு இயற்றிய சட்டம் உள்ளதால் உடனடியாக ஆக்கிரமிப்புகளை அகற்றும் படி மதுரை ஐகோர்ட்டு கிளை சமீபத்தில் தமிழக அரசுக்கு உத்தரவிட்டது.
இந்நிலையில் ஆக்கிரமிப்புகளை அகற்ற தேர்தல் மற்றும் மழைக்காலம் என்பதால் காலதாமதம் ஆனதால், கருப்பசாமி நீதி மன்ற அவமதிப்பு வழக்கை மதுரை ஐகோர்ட்டு கிளையில் மீண்டும் தொடர்ந்தார். இந்த வழக்கு விசாரணை வருகிற 25-ந் தேதி வருகிறது.
120 ஏக்கர் நிலம் மீட்பு
இந்த நிலையில் நேற்று திருச்சி ஆற்று பாதுகாப்புக் கோட்ட நீர்வள பாதுகாப்பு துறை மற்றும் வருவாய் துறையினர் சார்பில் 10-க்கும் மேற்பட்ட பொக்லைன் எந்திரங்கள் மூலம் நிலம் சீர்திருத்தப்பட்டும், மரங்கள் அகற்றப்பட்டது. இதில் திருச்சி வருவாய் கோட்டாட்சியர் தவச்செல்வம் தலைமையில் நீர்வள ஆற்றுப்பாதுகாப்பு கோட்ட செயற்பொறியாளர் மணிமோகன், உதவி செயற்பொறியாளர் ஜெயராமன், உதவி பொறியாளர் ராஜரத்தினம், திருவெறும்பூர் தாசில்தார் செல்வகணேஷ் மற்றும் அதிகாரிகள் முன்னிலையில் பணியாளர்களால் 120 ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலத்தை மீட்கும் பணி நடைபெற்றது. ஆக்கிரமிப்பு நிலம் மீட்கப்பட்ட ஏரி இருந்த இடத்தில், இது பொதுப்பணித்துறைக்கு சொந்தமான நீர்வள ஆற்றுப்பாசன இடம் என்ற பதாகையும் அங்கு நாட்டப்பட்டது.
போலீஸ் குவிப்பு
மேலும் அங்கு சட்டம்-ஒழுங்கு பிரச்சனை ஏற்படாத வகையில் திருவெறும்பூர் துணை போலீஸ் சூப்பிரண்டு சுரேஷ்குமார் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் பன்னீர்செல்வம், வெற்றிவேல், சந்திரமோகன் உள்பட 50-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com