முழு ஊரடங்கால் திருப்பூர் மாவட்டத்தில் சாலைகள் வெறிச்சோடின கடைகளும் அடைப்பு

திருப்பூர் மாவட்டத்தில் முழு ஊரடங்கையொட்டி சாலைகள் வெறிச்சோடின. கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன.
முழு ஊரடங்கால் திருப்பூர் மாவட்டத்தில் சாலைகள் வெறிச்சோடின கடைகளும் அடைப்பு
Published on

திருப்பூர்,

நாடு முழுவதும் கொரோனா வைரசின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. இதன் காரணமாக தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் பாதிப்பு எண்ணிக்கை அதிகமாக இருப்பதால், இந்த மாதம் உள்ள 4 ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தமிழக அரசு உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில் இந்த மாதத்தில் நேற்று 3-வது ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அமலில் இருந்தது. இதனால் திருப்பூர் மாநகர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள காய்கறி, மளிகை, இறைச்சி, மீன் உள்ளிட்ட அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருந்தன. இதன் காரணமாக அசைவ பிரியர்கள் நேற்று முன்தினமே இறைச்சி, மீன் உள்ளிட்டவைகளை வாங்கி வைத்திருந்தனர். இதனால் நேற்று முன்தினம் இரவு இந்த கடைகளில் கூட்டம் அலைமோதியது.

கடைகள் அடைப்பு

இதற்கிடையே முழு ஊரடங்கான நேற்று காலை மாநகர் பகுதிகளில் உள்ள முக்கிய சாலைகள் அனைத்தும் வாகன போக்குவரத்து இன்றி வெறிச்சோடி காணப்பட்டன. அவினாசி ரோடு, பல்லடம் ரோடு, காங்கேயம் ரோடு, ஊத்துக்குளி ரோடு உள்ளிட்ட சாலைகளில் வாகன போக்குவரத்து இன்றி இருந்தது. மேலும், மாநகராட்சி சிக்னல், அவினாசி ரோடு சிக்னல், வடக்கு போலீஸ் நிலையம் அருகே, டவுன்ஹால், குமார் நகர் சிக்னல் உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

அந்த வழியாக தேவையின்றி வந்தவர்களுக்கு அபராதமும் விதித்தனர். இதுபோல் ரெயில் நிலையம் அருகே காதர்பேட்டை செல்லும் சாலை, ஜெய்வாபாய் பள்ளி செல்லும் சாலை உள்ளிட்ட பகுதிகளில் இரும்பு தடுப்புகள் வைத்து போலீசார் அடைத்திருந்தனர். காதர்பேட்டையில் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டிருந்தன.

வெறிச்சோடியது

இதுபோல் லாரிகள் ஓடாததால் நேற்று ரெயில் நிலையம் அருகே உள்ள கூட்செட்டில் அனைத்து லாரிகளும் நிறுத்திவைக்கப்பட்டிருந்தன.

ஒட்டுமொத்தமாக திருப்பூர் மாநகர் முழுவதும் முழு ஊரடங்கிற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பொதுமக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டது. அனைவரும் வீடுகளிலேயே பாதுகாப்பாக இருந்தனர்.மேலும், மாவட்டத்தில் அனுப்பர்பாளையம், பல்லடம், காங்கேயம், தாராபுரம்,வெள்ளகோவில், உடுமலை,மடத்துக்குளம், மங்கலம், பொங்கலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் வாகன போக்குவரத்து இன்றி சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com