

குடியாத்தம்,
காட்பாடி அடுத்த கீழ்முட்டுக்கூர் கிராமத்தை சேர்ந்தவர் அண்ணாமலை. இவர் பரதராமியில் பெட்ரோல் பங்க் நடத்தி வருகிறார். இங்கு பரதராமி வி.எஸ்.புரத்தை சேர்ந்த குணப்பிரகாசம் (வயது 42) என்பவர் வேலை செய்து வந்தார். கடந்த செப்டம்பர் மாதம் 11-ந் தேதி பெட்ரோல் பங்கில் விற்பனையான ரூ.2 லட்சத்து 72 ஆயிரத்து 760-ஐ பரதராமியில் உள்ள வங்கியில் செலுத்த மோட்டார் சைக்கிள் பெட்டியில் வைத்து வங்கிக்கு சென்றார். வங்கியில் கூட்டம் அதிகம் இருந்ததால் அருகில் உள்ள டீக்கடைக்கு முன்பு வண்டியை சாவியுடன் நிறுத்திவிட்டு கடைக்கு சென்றுள்ளார். சிறிதுநேரம் கழித்து வந்தபோது பெட்டியின் பூட்டு திறக்கப்பட்ட நிலையில் அதிலிருந்த பணத்தை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரியவந்தது.
இதுகுறித்து அண்ணாமலைக்கு குணப்பிரகாசம் தகவல் தெரிவித்தார். பின்னர் அண்ணாமலை பரதராமி போலீசில் புகார் அளித்தார். அதில் பணம் கொண்டு சென்ற குணப்பிரகாசம் மீது சந்தேகம் இருப்பதாக தெரிவித்திருந்தார். இதனையடுத்து குணப்பிரகாசம் தனது உறவினர்கள் மற்றும் நண்பர்களிடம் இருந்து பணத்தை பெற்று உரிமையாளரிடம் செலுத்தினார்.
ஐகோர்ட்டு உத்தரவு
இந்த நிலையில் குணப்பிரகாசம் சென்னை ஐகோர்ட்டில் மோட்டார் சைக்கிளில் வைத்திருந்த பணத்தை திருடி சென்ற சம்பவம் தொடர்பாக பரதராமி போலீசார் வழக்குப்பதிவு செய்து பணத்தை மீட்டு தர வேண்டும் என மனு தாக்கல் செய்தார்.
மனுவை விசாரணை செய்த நீதிபதி, குணப்பிரகாசத்தின் மனு மீது வழக்குப்பதிவு செய்து உரிய விசாரணை நடத்த உத்தரவிட்டார்.
இதனையடுத்து கே.வி.குப்பம் போலீஸ் இன்ஸ்பெக்டர் தீபா, பரதராமி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராமமூர்த்தி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.