அரோகரா கோஷம் முழங்க பழனி முருகன் கோவிலில் பங்குனி உத்திர தேரோட்டம் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்

பழனி முருகன் கோவிலில் பங்குனி உத்திர தேரோட்டம் நடந்தது. இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு "அரோகரா" கோஷம் எழுப்பியபடி தேரை வடம்பிடித்து இழுத்தனர்.
அரோகரா கோஷம் முழங்க பழனி முருகன் கோவிலில் பங்குனி உத்திர தேரோட்டம் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்தனர்
Published on

பழனி:

முருகப்பெருமானின் 3-ம் படைவீடான பழனி முருகன் கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர திருவிழா சிறப்புடன் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டுக்கான பங்குனி உத்திர திருவிழா கடந்த 12-ந்தேதி உபகோவிலான திருஆவினன்குடியில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான திருக்கல்யாணம் நேற்று முன்தினம் நடந்தது. 7-ம் நாள் திருவிழாவான நேற்று பங்குனி உத்திரம் ஆகும்.

இதையொட்டி தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் கேரளா, கர்நாடகா உள்ளிட்ட வெளிமாநிலங்களில் இருந்தும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பழனியில் குவிந்தனர். அவர்கள் தீர்த்தக்காவடி எடுத்து வந்து முருகப்பெருமானுக்கு அபிஷேகம் செய்து வழிபட்டனர். விழாவையொட்டி மலைக்கோவிலில் உள்ள பாரவேல் மண்டபம் 5 டன் மலர்களால் அலங்கரிக்கப்பட்டது.

தீர்த்தவாரி

பங்குனி உத்திர விழாவின் சிகர நாளான நேற்று அதிகாலை 4.30 மணிக்கு முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானையுடன் சண்முகநதியில் தீர்த்தவாரிக்கு எழுந்தருளினார். பின்னர் 6 மணிக்கு தீர்த்தம் வழங்குதல் நிகழ்ச்சி நடைபெற்றது. காலை 9 மணிக்கு திருஆவினன்குடி கோவிலில் தந்தப்பல்லக்கில் எழுந்தருளிய முத்துக்குமாரசுவாமிக்கு சிறப்பு பூஜைகள், தீபாராதனை நடந்தது.

பகல் 12.30 மணிக்கு மேல் மிதுன லக்னத்தில் முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானையுடன் வடக்கு கிரிவீதியில் இருந்த திருத்தேரில் எழுந்தருளினார். மாலை 4 மணிக்கு விநாயகர், அஸ்திர தேவர் தனித்தனி தேர்களில் எழுந்தருளினர். அவர்களுக்கு தீபாராதனை நடைபெற்ற பின் தேரை பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து சென்றனர். இதைத்தொடர்ந்து தேரில் எழுந்தருளியிருந்த முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானைக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனை நடந்தது. பின்னர் தேருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு சிதறு தேங்காய் உடைக்கப்பட்டது.

தேரோட்டம்

இதையடுத்து திருத்தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. கோவில் இணை ஆணையர் நடராஜன், திண்டுக்கல் சரக பேலீஸ் டி.ஐ.ஜி. ரூபேஷ்குமார் மீனா, உதவி ஆணையர் செந்தில்குமார், சித்தனாதன் சன்ஸ் சிவனேசன், தனசேகர், பழனிவேலு, கார்த்தி, கந்தவிலாஸ் உரிமையாளர் செல்வகுமார், நவீன், நரேஷ், கண்பத் கிராண்ட் உரிமையாளர் ஹரிஹரமுத்து, சரவணப்பொய்கை கந்தவிலாஸ் உரிமையாளர் பாஸ்கரன், ஜெயம் லாட்ஜ் உரிமையாளர் சரவணன், வி.பி.எஸ் கிராண்ட் ஓட்டல் உரிமையாளர் பெரியசாமி, பழனி நகர்மன்ற தலைவர் உமாமகேஸ்வரி, ஆனந்தவிலாஸ் முனியாண்டி, ஜவகர் ரெசிடன்சி மனோகரன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் வேணுகோபாலு, சுப்புரத்தினம், அ.தி.மு.க. நகர செயலாளர் முருகானந்தம் மற்றும் முக்கிய பிரமுகர்கள் வடம் பிடித்து தேரோட்டத்தை தொடங்கி வைத்தனர்.

அப்போது பக்தர்கள் "வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா" "வீரவேல் முருகனுக்கு அரோகரா" என்று சரண கோஷம் எழுப்பியபடி தேரை இழுத்தனர். தேர் நகருவதற்காக அதை பழனி கோவில் யானை கஸ்தூரி முட்டித் தள்ளியது. வடக்கு, கிழக்கு, தெற்கு, மேற்கு கிரிவீதிகளில் திரண்டிருந்த பக்தர்கள் வெள்ளத்தில் தேர் வலம் வந்தது. அப்போது தேரில் எழுந்தருளிய முத்துக்குமாரசுவாமி, வள்ளி-தெய்வானையை பக்தர்கள் பக்தியுடன் தரிசனம் செய்தனர். பின்னர் 6 மணிக்கு தேர் நிலைக்கு வந்து சேர்ந்தது. அப்போது பக்தர்கள் "அரோகரா" கோஷம் எழுப்பி முருகனை வழிபட்டனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com