சாத்தான்குளம் சம்பவத்தை கண்டித்து மாவட்டம் முழுவதும் கடைகள் அடைப்பு

சாத்தான்குளம் சம்பவத்தை கண்டித்து மாவட்டம் முழுவதும் நேற்று கடைகள் அடைக்கப்பட்டன.
சாத்தான்குளம் சம்பவத்தை கண்டித்து மாவட்டம் முழுவதும் கடைகள் அடைப்பு
Published on

தேனி,

தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்தி வந்த ஜெயராஜ், அவருடைய மகன் பென்னிக்ஸ் ஆகியோர் போலீசார் தாக்கியதில் உயிரிழந்தனர். இந்த சம்பவத்தை கண்டித்தும், இதற்கு காரணமான போலீசார் மீது கொலை வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியும் தமிழகம் முழுவதும் வணிகர்கள் நேற்று கடையடைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அதன்படி தேனி மாவட்டத்திலும் கடையடைப்பு போராட்டம் நடந்தது. இதற்கிடையே தேனி, கம்பம், போடி, பெரியகுளம், சின்னமனூர், கூடலூர் ஆகிய நகராட்சி பகுதிகளில் ஏற்கனவே கடுமையான கட்டுப்பாடுகளுடன் முழு ஊரடங்கு அமலில் உள்ளது. இங்கு மருந்துக்கடைகள், அத்தியாவசிய பொருட்கள் விற்பனை கடைகள் மட்டும் திறக்க அனுமதிக்கப்பட்டு இருந்தன.

இந்தநிலையில் சாத்தான்குளம் சம்பவத்தை கண்டித்து மாவட்டம் முழுவதும் அனைத்து கடைகளும் நேற்று அடைக்கப்பட்டன. ஓட்டல்களும் மூடப்பட்டிருந்தன. தேனி நகரை பொறுத்தவரை அத்தியாவசிய பொருட்கள் விற்பனை செய்யும் சில்லரை மற்றும் மொத்த விற்பனை கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டன. மருந்துக்கடைகளும் அடைக்கப்பட்டன. ஓரிரு மருந்து கடைகள் மட்டும் பகல் 11 மணிக்கு பின்னர் திறக்கப்பட்டது.

அத்தியாவசிய பொருட்கள்

இதேபோல் மாவட்ட அனைத்து வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் செல்வக்குமார் தலைமையில், உயிரிழந்த சாத்தான்குளம் வியாபாரிகளுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி தேனி நேரு சிலை சிக்னல் அருகில் நடந்தது. சின்னமனூர் அருகே காமாட்சிபுரத்தில் கடைகள் அடைக்கப்பட்ட நிலையில், சாத்தான்குளத்தில் உயிரிழந்த தந்தை-மகன் இருவரின் புகைப்படத்துக்கும் வியாபாரிகள் மாலை அணிவித்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

மாவட்டம் முழுவதும் கடைகள் முழுமையாக அடைக்கப்பட்டதால் அத்தியாவசிய பொருட்களை மக்கள் வாங்க முடியாத நிலைமை ஏற்பட்டது. வியாபாரிகள் பலரும் அத்தியாவசிய பொருட்களை வீடு தேடி வழங்கும் சேவையையும் நேற்று நிறுத்தி வைத்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com