இயற்கை எரிவாயு எடுக்க எதிர்ப்பு தெரிவித்து நெடுவாசலில் பொதுமக்கள் தொடர் போராட்டம்

இயற்கை எரிவாயு எடுக்க எதிர்ப்பு தெரிவித்து, நெடுவாசலில் பொதுமக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இயற்கை எரிவாயு எடுக்க எதிர்ப்பு தெரிவித்து நெடுவாசலில் பொதுமக்கள் தொடர் போராட்டம்
Published on

வடகாடு,

இயற்கை எரிவாயு

புதுக்கோட்டை மாவட்டம், வடகாடு அருகே உள்ள நெடுவாசலில் ஹைட்ரோ கார்பன் எனும் இயற்கை எரிவாயு எடுக்க மத்திய அரசு அனுமதி அளித்தது. இதையடுத்து, நெடுவாசல் மற்றும் அதைச்சுற்றியுள்ள கிராமங்களில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டால் இப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் பாதிக்கப்பட்டு, தங்களது வாழ்வாதாரமான விவசாயம் அழிந்துவிடும் என்றும், எனவே இத்திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தியும், அப்பகுதி விவசாயிகள் மற்றும் கிராம மக்கள் திட்டம் அறிவிக்கப்பட்ட நாளிலிருந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

மேலும் அப்பகுதியில் ஆய்வு செய்ய சென்ற வருவாய்த்துறை, ஓ.என்.ஜி.சி. அதிகாரிகளை முற்றுகையிட்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து நெடுவாசல் கிராமத்திற்கு செல்லும் சாலையின் இருபுறமும் மற்றும் கடைகளிலும் கருப்பு கொடி கட்டி போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தநிலையில், நெடுவாசல் கிராமத்தில் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தால் ஆழ்குழாய் கிணறு அமைக்கப்பட்டுள்ள இடத்தின் அருகே பந்தல் அமைத்து, நேற்று பெண்கள், சிறுவர்கள் உள்பட ஏராளமானோர் இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டத்தை ரத்துசெய்ய வலியுறுத்தி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மேலும், கடந்த 8 நாட்களாக இரவு, பகல் பாராமல் இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டத்தை ரத்து செய்ய வலியுறுத்தி போராடி வரும் மக்கள், தங்களின் கோரிக்கைகளுக்கு மத்திய, மாநில அரசுகள் இதுவரை செவிசாய்க்காதது வேதனை அளிப்பதாக தெரிவித்துள்ளனர். மேலும் இதற்காக தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபடப்போவதாகவும் கூறுகின்றனர். நேற்று தமிழ்நாடு விவசாயிகள் சங்க தலைவர் குணசேகரன் நெடுவாசலில் வந்து பார்வையிட்டு, போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேசினார்.

உதவி கலெக்டர் ஆய்வு

புதுக்கோட்டை உதவி கலெக்டர் அம்ரித், நெடுவாசலில் எரிவாயு சோதனை மேற்கொள்ளப்பட்ட இடத்தை ஆய்வு செய்தார். அப்போது, அத்திட்டம் தொடர்பாக விவசாயிகள் மற்றும் வருவாய்த் துறையினரிடம் விளக்கங்களை கேட்டு சென்றார். நெடுவாசலுக்கு அரசு அலுவலர்களை அனுமதிக்க மக்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வந்ததால், நேற்று வருவாய்த்துறையினர் ஆய்வுக்கு வந்தபோது வடகாடு போலீஸ் இன்ஸ்பெக்டர் கரிகாலசோழன் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது கறம்பக்குடி வட்டாட்சியர் யோகேஸ்வரன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

விழிப்புணர்வு பாதயாத்திரை

புதுக்கோட்டையில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி அலுவலகத்தில், அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்க தலைவர் திருநாவுக்கரசு நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், கடந்த 3 ஆண்டுகளாக நாடு முழுவதும் கடுமையான வறட்சி நிலவி வருகிறது. தமிழ்நாடு உள்பட 21 மாநிலங்களை இந்த ஆண்டில் வறட்சி பாதித்த மாநிலமாக மத்திய அரசு அறிவித்து உள்ளது. டெல்டா மாவட்டங்களில் சம்பா, குறுவை சாகுபடிகள் முற்றிலுமாக பாதிக்கப்பட்டு உள்ளது. மத்திய அரசிடம் சுமார் ரூ.39 ஆயிரம் கோடி அளவிற்கு வறட்சி நிவாரணம் வேண்டுமென தமிழக அரசு கோரி உள்ளது. இதை உடனடியாக மத்திய அரசு வழங்க வேண்டும்.

200க்கும் மேற்பட்ட விவசாயிகள் தற்கொலை செய்துள்ள நிலையில் அரசு 17 பேருக்கு மட்டும் நிவாரண தொகை வழங்கியது சரியல்ல. தேசிய வேலை உறுதித்திட்ட திட்டத்தில் வருடத்திற்கு 150 நாள் வேலை வழங்க வேண்டும் என உச்சநீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. ஆனால் கடந்த வருடம் சராசரியாக 44 நாட்கள் மட்டுமே வேலை வழங்கப்பட்டுள்ளது. முழுமையான கூலியையும் வழங்குவதில்லை. எனவே, விவசாய தொழிலாளர்களின் கோரிக்கையை வலியுறுத்தி வருகிற மார்ச் மாதத்தில் சென்னையில் கோட்டையை நோக்கி முற்றுகை போராட்டம் நடத்துவதற்கு திட்டமிட்டு உள்ளோம். புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசலில் ஹைட்ரோகார்பன் எனும் இயற்கை எரிவாயு எடுக்கும் திட்டத்தை பற்றி அந்தப்பகுதி மக்களிடம் எந்தவித கருத்தும் கேட்காமல் மத்திய அரசு செயல்படுத்துவது மிகவும் கண்டிக்கத்தக்கது. இத்திட்டத்தை ஒருபோதும் நாங்கள் ஏற்க மாட்டோம். எங்கள் சங்கத்தின் சார்பில் இது குறித்து விழிப்புணர்வு பாதையாத்திரை நடத்துவதற்கும் திட்டமிட்டு உள்ளோம், என அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com