தஞ்சை மாநகராட்சி திடலில் தற்காலிக பஸ் நிலையம் அமைக்க வேண்டும்

தஞ்சை மாநகராட்சி திடலில் தற்காலிக பஸ் நிலையம் அமைக்க வேண்டும்

தஞ்சை மாநகராட்சி திடலில் தற்காலிக பஸ் நிலையம் அமைக்க வேண்டும் என்று கலெக்டரிடம் போக்குவரத்து தொழிலாளர்கள் கோரிக்கை வைத்தனர்.
Published on

தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் நேற்று நடந்தது. கூட்டத்தில் விவசாயிகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் கோரிக்கை மனுக்களை அளித்தனர். மக்கள் பயன்பாட்டு சீரமைப்புக்குழு ஒருங்கிணைப்பாளர் ராசு முனியாண்டி தலைமையில் பல்வேறு அமைப்பை சேர்ந்தவர்கள் கலெக்டர் அண்ணாதுரையிடம் கோரிக்கை மனு அளித்தனர்.

அதில், தஞ்சை மேரீஸ்கார்னர்-வண்டிக்காரத்தெரு இடையே மேம்பாலம் கட்டப்பட்டு வருகிறது. நாஞ்சிக்கோட்டை ரோடு-மேரீஸ்கார்னர் சாலை சந்திக்கும் இடத்தில் மேம்பாலம் முடிகிறது. நாஞ்சிக்கோட்டை பகுதியில் இருந்து நகர் பகுதிக்கு வாகனங்கள் வர எந்த வழிவகையும் செய்யப்படவில்லை. கல்லுக்குளம் சாலை முடியும் இடத்தில் உள்ளதை போல் சுரங்கப்பாதை அமைக்க வேண்டும். மக்கள் வசதிக்காக கொண்டு வரப்பட்ட மேம்பாலத்தின் வரைபடம் மாற்றப்பட்டுள்ளது. விபத்துகளை தவிர்க்கும் வகையில் சுரங்கப்பாதை அமைக்க வேண்டும். இல்லையென்றால் முதலில் திட்டமிட்டப்படி வ.உ.சி. நகர் அருகில் உள்ள பெட்ரோல் விற்பனை நிலையம் வரை மேம்பாலத்தை கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

போக்குவரத்து தொழிலாளர்கள்

அதேபோல தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக தொழிலாளர்கள் சங்க பொதுச் செயலாளர் மதிவாணன் மற்றும் சிலர் அளித்த மனுவில், தஞ்சை புதிய பஸ் நிலையத்தில் நகர்புற பஸ்கள் வந்து செல்லும் இடத்தில் ஒரு பகுதியில் மாநகராட்சி சார்பில் கடைகள் கட்டப்பட்டு வருகின்றன. மறுபுறம் இருசக்கர வாகன நிறுத்தும் இடம் உள்ளது.

ஆட்டோக்களும் அங்கு நிறுத்தப்படுவதால் நகர்புற பஸ்கள் இயக்கப்படுவதில் சிரமம் ஏற்படுகிறது. பட்டுக்கோட்டைக்கு செல்லும் பஸ்கள் நிற்கும் பகுதியில் நகர்புற பஸ்களுக்கு இடஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக தெரிகிறது. ஆயிரக்கணக்கில் பயணிகள் வந்து செல்வதால் ஏற்கனவே இடநெருக்கடி உள்ளது. நகர்புற பஸ்களும் அந்த பகுதியில் வந்து செல்ல ஏற்பாடு செய்தால் கடுமையான நெருக்கடியும், விபத்துக்களும் ஏற்படும் சூழல் உருவாகும். எனவே புதிய பஸ் நிலையம் பின்புறம் உள்ள மாநகராட்சி திடலை தற்காலிக நகர் பஸ் நிலையமாக மாற்றி மின்வசதி, குடிநீர் வசதி செய்து தர வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

பெண்கள்

தஞ்சையை அடுத்த மருதக்குடி கிராமத்தை சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட பெண்கள் 100 நாள் வேலைத்திட்ட அடையாள அட்டைகளுடன் வந்து கோரிக்கை மனு அளித்தனர். பின்னர் அவர்கள் கூறியதாவது:- 100 நாள் வேலைத்திட்டத்தின் கீழ் நாங்கள் பார்த்த வேலைக்கு கடந்த 8 மாதங்களாக சம்பளம் வழங்கவில்லை. வேலையும் சரிவர வழங்கப்படுவதில்லை. எங்களுக்கு வழங்கப்பட வேண்டிய சம்பளத்தை முழுமையாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயம் நடைபெறாததால் வேறு எந்த வேலைக்கும் செல்ல முடியவில்லை. மிகவும் சிரமப்பட்டு வருகிறோம். சம்பளம் வழங்குவதுடன் வேலையும் தொடர்ந்து கிடைக்க நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் பசி, பட்டினியோடு தற்கொலை செய்வதை தவிர வேறு வழியில்லை.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

தஞ்சையை அடுத்த வேங்கராயன்குடிகாடு கிராமத்தை சேர்ந்த விவசாயிகள், பெண்கள் சிலர் கலெக்டர் அண்ணாதுரையிடம் கோரிக்கை மனு அளித்தனர். அதில் நாஞ்சிக்கோட்டை பகுதியில் எங்களுக்கு விளை நிலம் உள்ளது. அரசு வழிகாட்டி மதிப்பில் அந்த நிலத்தின் மதிப்பு அதிகமாக உள்ளது. விளை நிலத்திற்கு மனைப்பிரிவுக்கான மதிப்பு கணக்கிடப்பட்டுள்ளது. அதாவது ஒரு ஏக்கர் நிலத்திற்கு ரூ.60 லட்சம் காட்டப்பட்டுள்ள மதிப்பை விளை நிலமாக கணக்கில் கொண்டு ரூ.7 லட்சம் நிர்ணயம் செய்ய வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது. மனுக்களை பெற்றுக்கொண்ட கலெக்டர் அண்ணாதுரை கோரிக்கைகள் தொடர்பாக உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார்.

X

Daily Thanthi
www.dailythanthi.com