அம்பையில் 2 வேன்கள்–வைக்கோல் படப்புக்கு தீ வைப்பு
அம்பை,
அம்பையில் 2 வேன்கள் மற்றும் வைக்கோல் படப்புக்கு மர்ம நபர்கள் தீ வைத்தனர். அவர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
அம்பை கோவில்குளம் கீழ தெருவை சேர்ந்த கணேசன் மகன் பாலசுப்பிரமணியன். அவருடைய நண்பர் குத்தப்பாஞ்சானை சேர்ந்த கிருஷ்ணபாண்டி. இவர்கள் இருவரும் சொந்தமாக வேன் வைத்து அங்குள்ள ஒரு தனியார் ஆலைக்கு ஒப்பந்த அடிப்படையில் வாடகைக்கு ஓட்டி வருகின்றனர். இரவில் பாலசுப்பிரமணியன் வீட்டின் அருகே 2 வேன்களும் நிறுத்தப்பட்டிருக்கும்.
இந்தநிலையில் நேற்று அதிகாலை 3 மணி அளவில் யாரோ மர்ம நபர்கள் 2 வேன்களுக்கும் தீ வைத்துவிட்டு தப்பிச் சென்றனர். தீப்பிடித்து எரிந்ததும் அந்த வழியாக வந்த அக்கம்பக்கத்தினர் பார்த்து கூச்சலிட்டனர். சத்தம் கேட்டதும் பாலசுப்பிரமணியன் வெளியே வந்து பார்த்தார். வேன்கள் எரிந்து கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர், இதுபற்றி அம்பை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தார். அதன்படி தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.
மேலும் அதே பகுதியில் பட்டன் என்பவருக்கு சொந்தமான வைக்கோல் படப்புக்கும் மர்ம நபர்கள் தீ வைத்துள்ளனர். இதனால் வைக்கோல் படப்பும் தீயில் எரிந்து நாசமானது. இதுகுறித்து அம்பை போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு செய்து, வேன்கள் மற்றும் வைக்கோல் படப்புக்கு தீ வைத்துச் சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

