சாத்தான்குளத்தில் தந்தை- மகன் இறந்த சம்பவத்தை கண்டித்து தஞ்சை மாவட்டத்தில் கடைகள் அடைப்பு

சாத்தான்குளத்தில் தந்தை- மகன் இறந்த சம்பவத்தை கண்டித்து தஞ்சை மாவட்டத்தில் கடைகள் அடைக்கப்பட்டன. பல்வேறு கட்சிகள், இயக்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டமும் நடைபெற்றது.
சாத்தான்குளத்தில் தந்தை- மகன் இறந்த சம்பவத்தை கண்டித்து தஞ்சை மாவட்டத்தில் கடைகள் அடைப்பு
Published on

தஞ்சாவூர்,

சாத்தான்குளத்தில் வணிகர்களான ஜெயராஜ், அவருடைய மகன் பெனிக்ஸ் இருவரும் மர்மமான முறையில் இறந்தனர். போலீசார் சித்ரவதை செய்ததால் அவர்கள் மரணமடைந்ததாக வணிகர்கள் தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில் தந்தை- மகன் சாவுக்கு காரணமான போலீசார் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தமிழகம் முழுவதும் கடையடைப்பு போராட்டம் நடத்தப்போவதாக தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பினர் அறிவித்தனர்.

அதன்படி நேற்று கடையடைப்பு போராட்டம் நடைபெற்றது. தஞ்சை மாவட்டத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டன. வணிகர் சங்கங்களின் பேரமைப்பை சேர்ந்த நிர்வாகிகள் அனைவரும் கடைகளை அடைத்து இருந்தனர். இது தவிர மருந்துக்கடைகள், செல்போன் ரீசார்ஜ் செய்யும் கடைகள் என 300-க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டன. தஞ்சை பழைய பஸ் நிலையம், கீழவாசல், பர்மாகாலனி, புதிய பஸ் நிலையம், மருத்துவக்கல்லூரி சாலை, ரெயிலடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் ஆங்காங்கே கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன. இதே போல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் ஆங்காங்கே கடைகள் அடைக்கப்பட்டு இருந்தன.

பல்வேறு கட்சிகள் ஆர்ப்பாட்டம்

மேலும் தந்தை- மகன் மரணத்தை கண்டித்து தஞ்சை ரெயில் நிலையம் அருகே பல்வேறு கட்சிகள், இயக்கங்கள் சார்பில் ஆர்ப்பாட்டம் நேற்று நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தமிழர் தேசிய முன்னணி பொது செயலாளர் அயனாபுரம் முருகேசன் தலைமை தாங்கினார். மக்கள் அதிகாரம் மாநில பொருளாளர் காளியப்பன், தமிழ்த்தேச மக்கள் முன்னணி மாவட்ட செயலாளர் அருண்சோரி, இந்திய ஜனநாயக கட்சி தெற்கு மாவட்ட தலைவர் சிமியோன்சேவியர்ராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ஏ.ஐ.டி.யூ.சி. மாவட்ட துணை செயலாளர் துரைமதிவாணன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

திருக்காட்டுப்பள்ளி

இதேபோல் திருக்காட்டுப்பள்ளி மற்றும் பூதலூரில் அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டு இருந்தன. இதனால் திருக்காட்டுப்பள்ளி, பூதலூர் பகுதிகள் மக்கள் நடமாட்டமின்றி வெறிச்சோடி காணப்பட்டன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com