நாகர்கோவில் வந்த கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயில் ஒரு மணி நேரம் தாமதம் - பயணிகள் அவதி

நாகர்கோவிலுக்கு கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயில் ஒரு மணி நேரம் தாமதமாக வந்ததால் பயணிகள் அவதி அடைந்தனர்.
நாகர்கோவில் வந்த கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயில் ஒரு மணி நேரம் தாமதம் - பயணிகள் அவதி
Published on

நாகர்கோவில்,

கன்னியாகுமரியில் இருந்து சென்னைக்கு இயக்கப்படும் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயில் தினமும் மாலை 5.40 மணிக்கு நாகர்கோவில் ரெயில் நிலையத்துக்கு வரும். ஆனால் இந்த ரெயில் நேற்று ஒரு மணி நேரம் தாமதமாக அதாவது 6.40 மணிக்கு வந்தது. ரெயில் தாமதத்தால் பயணிகள் கடும் அவதி அடைந்தனர். கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயிலை கொச்சுவேளி பயணிகள் ரெயிலாக மாற்றி இயக்குவதால் தான் இந்த தாமதம் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

அதாவது இந்த ரெயில் கடந்த 15-ந் தேதி முதல் நாகர்கோவில்-கொச்சுவேளிக்கும், கொச்சுவேளி-நாகர்கோவிலுக்கும் இடையே பயணிகள் ரெயிலாக மாற்றி இயக்கப்பட்டு வருகிறது. கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயில் பகல் நேரத்தில் நாகர்கோவில் ரெயில் நிலையத்தில் பயனற்று நிறுத்தி வைக்கப்பட்டு இருந்ததால் இந்த மாற்று ஏற்பாட்டை ரெயில்வே நிர்வாகம் செய்தது. ஆனால் பயணிகள் ரெயிலாக மாற்றப்பட்ட 2-வது நாளிலேயே கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயில் சென்னைக்கு புறப்பட ஒரு மணி நேரம் தாமதம் ஆகியிருக்கிறது. இது பயணிகள் மத்தியில் கடும் எதிர்பை ஏற்படுத்தி உள்ளது. ஏன் எனில் குமரி மாவட்ட மக்கள் சென்னை செல்ல பெரும்பாலும் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயிலையே நம்பி உள்ளனர். அப்படி இருக்க ரெயில் புறப்பட தாமதம் ஏற்படுவதால் பயணிகள் வேதனை தெரிவித்துள்ளனர்.

ஏற்கனவே ஐலேண்டு எக்ஸ்பிரஸ் ரெயிலை தான் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயிலாக மாற்றி இயக்கினர். இதனால் இந்த ரெயில் தினமும் தாமதமாக புறப்பட்டது. எனவே கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயிலை தனி ரெயிலாக இயக்க வேண்டும் என்று பல்வேறு அரசியல் கட்சியினர் போராட்டங்கள் நடத்தியதன் விளைவாக கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் தனி ரெயிலாக இயக்கப்பட்டது.

இந்த நிலையில் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயிலை கொச்சுவேளி பயணிகள் ரெயிலாக மாற்றி இயக்குவதால் மீண்டும் தாமதம் ஏற்பட்டுள்ளது. எனவே ரெயில்வே நிர்வாகத்தின் மாற்று ஏற்பாட்டை கைவிட்டுவிட்டு கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயிலை மீண்டும் தனி ரெயிலாக இயக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர். கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயில் நேற்று முன்தினமும் சிறிது நேரம் தாமதமாக புறப்பட்டுச் சென்றது என்பது குறிப்பிடத்தக்கது.


Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com