குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள மதுபான கடையை இடமாற்றம் செய்ய வேண்டும் பொதுமக்கள், கலெக்டரிடம் மனு

ராசிபுரம் காமராஜ்நகரில் குடியிருப்பு பகுதியில் அமைந்து உள்ள மதுபான கடையை இடமாற்றம் செய்ய வலியுறுத்தி
குடியிருப்பு பகுதியில் அமைந்துள்ள மதுபான கடையை இடமாற்றம் செய்ய வேண்டும் பொதுமக்கள், கலெக்டரிடம் மனு
Published on

நாமக்கல்,

ராசிபுரம் நகராட்சிக்கு உட்பட்ட காமராஜ்நகர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நேற்று கலெக்டர் அலுவலகம் வந்து குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் கலெக்டர் ஆசியா மரியத்திடம் கோரிக்கை மனு ஒன்றை கொடுத்தனர். அந்த மனுவில் அவர்கள் கூறியிருப்பதாவது:

ராசிபுரம் கோனேரிப்பட்டி காமராஜ்நகர் பகுதியில் அரசு மதுபான கடை ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த மதுபான கடை குடியிருப்பு பகுதியில் அமைந்து உள்ளதால் நாங்கள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகி உள்ளோம். இந்த மதுபான கடையில் உள்ள பாரில் தினசரி காலை 5 மணி முதல் இரவு 12 மணி வரை மது விற்பனை நடைபெறுகிறது. அரசு அறிவிக்கும் விடுமுறை நாட்களிலும் கூட இதேபோன்று விற்பனை நடைபெறுகிறது. இந்த மதுபான கடைக்கு அருகில் பொது தண்ணீர் குழாய் உள்ளது. அதில் காலை வேளையில் பெண்கள் தண்ணீர் பிடிக்கும்போது அருகிலேயே அமர்ந்து மது அருந்துகின்றனர். போதையில் பெண்கள் இருப்பதையும் பொருட்படுத்தாமல் தகாத வார்த்தைகளை பேசுகின்றனர்.

சிலர் குடிபோதையில் ஆடைகள் விலகி நிலையில் அங்கேயே படுத்து கொள்கின்றனர். பொதுமக்கள் செல்லும் பொதுபாதையில் வாகனங்களை போக்குவரத்துக்கு இடையூறாக நிறுத்துகின்றனர். இரவு நேரங்களில் பெண்கள் அவ்வழியாக செல்லும்போது குடிபோதையில் தகராறு செய்கின்றனர். இதனால் பெண்கள் அவ்வழியே செல்வதற்கு அச்சப்படுகிறார்கள். அப்பகுதி இரவு நேரங்களில் திறந்தவெளி பார் போன்று செயல்படுகிறது.

காலை நேரங்களில் வாகனங்களை வழிகளில் நிறுத்துவதால் பள்ளிக்கு செல்லும் மாணவ, மாணவிகள் சிரமம் அடைந்து வருகின்றனர். எனவே காமராஜ் நகர் பகுதியில் உள்ள மதுபான கடையை வேறு இடத்திற்கு மாற்றம் செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம்.

இவ்வாறு அந்த மனுவில் கூறி இருந்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com