இனிப்பு பலகாரங்கள் விற்பனை செய்வோர் உணவு பாதுகாப்பு சட்டத்தின்கீழ் பதிய வேண்டும்

தீபாவளி மற்றும் கிறிஸ்துமஸ் போன்ற பண்டிகை காலத்தில் இனிப்பு பலகாரங்கள் விற்பனை செய்பவர்கள் உணவு பாதுகாப்பு சட்டத்தின்கீழ் பதிவு செய்துகொள்ள வேண்டும்.
இனிப்பு பலகாரங்கள் விற்பனை செய்வோர் உணவு பாதுகாப்பு சட்டத்தின்கீழ் பதிய வேண்டும்
Published on

சிவகங்கை,

இதுகுறித்து கலெக்டர் லதா விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தீபாவளி மற்றும் கிறிஸ்துமஸ் போன்ற பண்டிகை காலத்தில் விதவிதமான இனிப்பு பலகாரங்கள், காரங்கள் மற்றும் கேக் போன்ற பேக்கரி உணவு பொருட்கள் மக்கள் விரும்பி வாங்கி உண்பதும், சொந்த பந்தங்களுக்கு அன்பாக அளிப்பதும் நமது கலாசாரமாக விளங்கி வருகிறது. தீபாவளி பண்டிகைக்காக இனிப்பு மற்றும் கார பண்டங்களுக்கு சீட்டு நடத்துபவர்கள் உள்பட அனைத்து தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்களும் உணவு பாதுகாப்புத்துறையில் பதிவு செய்து உரிமம் பெற்று, பொதுமக்களுக்கு வினியோகம் செய்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. சுவீட்ஸ் மற்றும் பேக்கரி பொருட்கள் தயாரிப்பவர்கள் தரமான மூலப்பொருட்களை கொண்டு சுகாதாரமான முறையில் தயாரித்து பாதுகாப்பான உணவுப்பொருட்களை மக்களுக்கு வழங்க வேண்டும்.

உணவு தயாரிப்பில் கலப்படமான பொருட்களையோ, அனுமதிக்கப்பட்ட அளவிற்கு அதிகமான நிறமிகளையோ உபயோகிக்கக்கூடாது. பேக்கிங் செய்யப்பட்ட உணவு பொருட்களுக்கு விவர சீட்டு இடும்போது அதில் தயாரிப்பாளரின் முழு முகவரி, உணவு பொருளின் பெயர், தயாரிப்பு அல்லது பேக்கிங் செய்யப்பட்ட தேதி, சிறந்த பயன்பாட்டு காலம், சைவ மற்றும் அசைவ குறியீடு ஆகியனவற்றை அவசியம் குறிப்பிட வேண்டும். உணவுப்பொருட்களை ஈக்கள், பூச்சிகள் மற்றும் கிருமி தொற்று இல்லாத சுகாதாரமான சூழலில் பொதுமக்களுக்கு விற்பனை செய்திட வேண்டும்.

பண்டிகை காலத்தில் மட்டும் பலகாரங்கள் தயாரிப்பவர்கள் உள்பட அனைத்து தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்களும் உடனடியாக உணவு பாதுகாப்பு அலுவலகத்தினை தொடர்பு கொண்டு, இந்திய உணவு பாதுகாப்பு தரங்கள் சட்டத்தின்கீழ் தங்களது வணிகத்தினை பதிவு செய்து உரிமம் பெற வேண்டும்.

பொதுமக்களும் பண்டிகை காலங்களில் பலகாரங்கள் வாங்கும்போது, உணவு பாதுகாப்பு துறையில் பதிவு பெற்ற நிறுவனங்களில் மட்டும் வாங்குமாறும், பேக்கிங் செய்யப்பட்ட பொருட்களை விவரச்சீட்டு இருந்தால் மட்டுமே வாங்கி உபயோகிக்க வேண்டும். மேலும் இதுதொடர்பான புகார்கள் ஏதும் இருப்பின் அதனை 94440-42322 என்ற வாட்ஸ்-அப் எண்ணிற்கு புகார் அளிக்கலாம்.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com