வாக்குப்பதிவு எந்திரங்கள் ஜனநாயகத்தை சீரழித்துவிட்டன - சிவசேனா குற்றச்சாட்டு

வாக்குப்பதிவு எந்திரங்கள் ஜனநாயகத்தை சீரழித்து விட்டதாக சிவசேனா குற்றம் சாட்டி உள்ளது.
வாக்குப்பதிவு எந்திரங்கள் ஜனநாயகத்தை சீரழித்துவிட்டன - சிவசேனா குற்றச்சாட்டு
Published on

மும்பை,

மராட்டியத்தில் பால்கர், பண்டாரா-கோண்டியா ஆகிய நாடாளுமன்ற தொகுதிகளுக்கு கடந்த 28-ந் தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது. கூட்டணி கட்சிகளான பா.ஜனதா மற்றும் சிவசேனா பால்கர் தொகுதியில் தனித்து போட்டியிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இந்தநிலையில் பல்வேறு வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு எந்திரங்களில் கோளாறு ஏற்பட்டது. மேலும் ஓட்டு போட்டதற்கான அத்தாட்சி சீட்டும் வாக்காளர்களுக்கு முறையாக கிடைக்கவில்லை. இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. வாக்குப்பதிவு எந்திர கோளாறில் பா.ஜனதாவுக்கு தொடர்பு இருப்பதாக எதிர்க்கட்சியினர் குற்றம்சாட்டினர்.

ஆனால் அதிகப்படியான வெயிலின் காரணமாகவே வாக்குப்பதிவு எந்திரங்களில் கோளாறு ஏற்பட்டதாக தேர்தல் ஆணைய அதிகாரிகள் விளக்கம் அளித்தனர். இதையடுத்து பண்டாரா-கோண்டியா தொகுதியில் 49 வாக்குச்சாவடிகளில் நேற்று மறுவாக்குப்பதிவு நடத்தப்பட்டது.

இந்தநிலையில் சிவசேனா தனது அதிகாரப்பூர்வ பத்திரிகையான சாம்னாவில் இது குறித்து கூறியிருப்பதாவது:-

வாக்குப்பதிவு எந்திரங்கள் ஜனநாயகத்தை சீரழித்துவிட்டன. இனிமேல் உலகின் மிகப்பெரிய ஜனநாயக நாடு என இந்தியாவை யாரும் கூற முடியாது. ஆளும் கட்சியின் பணப்பட்டுவாடா, மது பாட்டில்கள் புழக்கம் மற்றும் சர்வாதிகார மிரட்டல்கள் என எந்தவொரு புகாரையும் தேர்தல் ஆணையம் ஏற்றுக்கொள்ள தயாராக இல்லை. தற்போதைய தேர்தல் ஆணையம் அரசாங்கத்தின் அடிமை போல ஆகிவிட்டது.

பிரதமர் மோடி பயணம் செய்யும் விமானத்தின் என்ஜினோ, பா.ஜனதா கட்சியினர் பயன்படுத்தும் கணினியோ அதிகப்படியான வெயிலால் பாதிக்கப்படாத போது வாக்குப்பதிவு எந்திரங்களில் மட்டும் எதற்காக கோளாறு ஏற்பட வேண்டும்.

வாக்குப்பதிவு எந்திரங்களுக்கு எதிராக பா.ஜனதா ஒரு காலத்தில் குரல் கொடுத்து வந்தது. தற்போது மொத்த நாடும் வாக்குப்பதிவு எந்திரங்களை எதிர்க்கிறது. மாறாக பா.ஜனதா அவற்றை ஆதரித்து வருகிறது. உலக நாடுகளே வாக்குப்பதிவு எந்திரங்களை கைவிட்டபோது இந்திய அரசு மட்டும் ஏன் ஆதரிக்க வேண்டும்?. தேர்தல் முறையில் பொதுமக்கள் நம்பிக்கை இழப்பது ஜனநாயகத்துக்கு மிகவும் ஆபத்தானது. இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com