தூத்துக்குடியில் பரபரப்பு: ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் 5 பேர் திடீர் கைது போலீஸ் நிலையத்தில் பொதுமக்கள் குவிந்ததால் விடுவிப்பு

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் 5 பேரை போலீசார் திடீரென கைது செய்தனர். இதனால் போலீஸ் நிலையத்தில் பொதுமக்கள் குவிந்ததையடுத்து அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.
தூத்துக்குடியில் பரபரப்பு: ஸ்டெர்லைட் எதிர்ப்பாளர்கள் 5 பேர் திடீர் கைது போலீஸ் நிலையத்தில் பொதுமக்கள் குவிந்ததால் விடுவிப்பு
Published on

தூத்துக்குடி,

தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலை தொடர்பாக சமூக வலைதளங்களில் பதிவு செய்து அமைதியை சீர்குலைக்கும் வகையில் செயல்பட்டு வருபவர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் தூத்துக்குடி நகர் பகுதிகளை சேர்ந்த சிலர், ஸ்டெர்லைட் ஆலையை கண்டித்து வீடுகளில் கருப்பு கொடி கட்ட போவதாகவும், அதற்காக சிலர் கருப்பு துணிகளை வாங்கி வருவதாகவும் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

இதையடுத்து போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது தூத்துக்குடி எட்டயபுரம் சாலையில் உள்ள தனியார் மகளிர் கல்லூரி அருகே வந்த காரை நிறுத்தி சோதனை செய்தனர்.

அந்த காரில் தூத்துக்குடி ஜார்ஜ் ரோட்டை சேர்ந்த வினோத் (வயது 40), சகாயபுரத்தை சேர்ந்த ஆனந்த் (40), திரேஸ்புரத்தை சேர்ந்த செல்வகுமார் (35), ஸ்நோ காலனியை சேர்ந்த திலக் (35), ஆனந்த் (38) ஆகியோர் இருந்தனர். அவர்கள் போராட்டத்துக்கான கருப்பு துணி வாங்கி வந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார், அவர்கள் 5 பேரையும் கைது செய்து சிப்காட் போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர்.

இதனை அறிந்த தூத்துக்குடி திரேஸ்புரம், ஜார்ஜ் ரோடு உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் இரவில் சிப்காட் போலீஸ் நிலையத்தில் குவிந்தனர். கைது செய்யப்பட்டவர்களை உடனடியாக விடுவிக்குமாறு கோரிக்கை விடுத்தனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு முரளி ரம்பாவிடமும் கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து அவர் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். அதன்பின்னர் அந்த 5 பேரையும் விடுவிக்க அவர் உத்தரவிட்டார். அதன்பேரில் 5 பேரும் விடுவிக்கப்பட்ட பின் பொதுமக்கள் அங்கிருந்து கலை ந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com