திருநெல்வேலி: கொலை முயற்சி வழக்கில் 4 பேருக்கு சிறை தண்டனை

வள்ளியூர் பகுதியில் வயலில் தண்ணீர் பாய்ச்சுவதில் ஏற்பட்ட பிரச்சினையின் முன்விரோதம் காரணமாக ஒருவரை, அதே பகுதியைச் சேர்ந்த 4 பேர் சேர்ந்து அரிவாளால் தாக்கி கொலை முயற்சி செய்தனர்.
திருநெல்வேலி: கொலை முயற்சி வழக்கில் 4 பேருக்கு சிறை தண்டனை
Published on

திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூர் அருகே, நம்பியான்விளை பகுதியில் கடந்த 2016-ம் ஆண்டு வயலில் தண்ணீர் பாய்ச்சுவதில் ஏற்பட்ட பிரச்சினையின் முன்விரோதம் காரணமாக நம்பியான்விளை பகுதியை சேர்ந்த கார்த்திக் (வயது 42) என்பவரை, அதே பகுதியைச் சேர்ந்த சரித்திரபதிவேடு குற்றவாளி கண்ணன்(51) உட்பட 4 பேர் சேர்ந்து அரிவாளால் தாக்கி கொலை முயற்சி செய்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டு, புலன் விசாரணையின் முடிவில் நீதிமன்றத்தில் இறுதி அறிக்கை தாக்கல் செய்து வழக்கின் விசாரணையானது வள்ளியூர் சார்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்த நிலையில் சரித்திர பதிவேடு குற்றவாளி கண்ணன்(51), முருகேசன்(48), ராதாகிருஷ்ணன்(35) மற்றும் ராஜேஷ்(36) ஆகிய 4 பேர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டு, வள்ளியூர் சார்பு நீதிமன்ற நீதிபதி அசோக்குமார் இன்று இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட முதல் 2 குற்றவாளிகளான கண்ணன், முருகேசனுக்கு (IPC 307, 324 பிரிவுகளின் படி) தலா 10 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.6,500 அபராதமும், வழக்கில் சம்பந்தப்பட்ட மற்ற குற்றவாளிகளான ராதாகிருஷ்ணன், ராஜேஷ் ஆகிய 2 பேருக்கும் (IPC 323 பிரிவுகளின் படி) ஒரு ஆண்டு சிறை தண்டனையும் ரூ.1,000 அபராதமும் விதித்து தீர்ப்பு வழங்கினார்.

இந்த வழக்கில் சாட்சிகளை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுக் கொடுத்த வள்ளியூர் உட்கோட்ட டி.எஸ்.பி. வெங்கடேஷ், வள்ளியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுரேஷ்குமார், வழக்கின் விசாரணைக்கு உதவி செய்த பெண் ஏட்டு சரவணாதேவி, குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தர திறம்பட வாதிட்ட அரசு வழக்கறிஞர் ராமநாராயணபெருமாள் ஆகியோரை திருநெல்வேலி மாவட்ட எஸ்.பி. பிரசண்ணகுமார் பாராட்டினார்.

திருநெல்வேலி மாவட்ட காவல் துறையானது, நீதிமன்றங்களில் நடைபெறும் வழக்குகளில் சாட்சிகளை ஆஜர்ப்படுத்தி குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்று தரும் முனைப்பில் தொடர்ந்து, உரிய சட்ட நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகிறது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com