

மும்பை,
வசாய்-விரார் பகுதியில் செல்வாக்கு மிக்க தலைவராக இருப்பவர் வசாய் எம்.எல்.ஏ. ஹித்தேந்திர தாக்கூர். 3 எம்.எல்.ஏ.க்களை கொண்ட இவரது பகுஜன் விகாஸ் அகாடி கட்சி மாநிலத்தை ஆளும் மகா விகாஸ் கூட்டணிக்கு ஆதரவு வழங்கி வருகிறது.
இந்தநிலையில் பி.எம்.சி. வங்கி முறைகேடு வழக்கு தொடர்பாக நேற்று முன்தினம் ஹித்தேந்திர தாக்கூர் எம்.எல்.ஏ.வின் நிறுவனத்துக்கு சொந்தமான இடம், குடியிருப்புகளில் அமலாக்கத்துறை அதிரடி சோதனை நடத்தினர். அந்தேரி, ஜூகு, செம்பூர், வசாய்-விரார் ஆகிய பகுதிகளில் இந்த சோதனை நடந்தது.
அப்போது அவரது நிறுவனத்துக்கும், பி.எம்.சி. வங்கி மோசடிக்கு தொடர்பு இருப்பது தொடர்பான ஆவணங்கள் சிக்கியதாக கூறப்படுகிறது. பி.எம்.சி. வங்கி மோசடி வழக்கில் ஏற்கனவே சிக்கி உள்ள டி.எச்.எப்.எல். நிறுவனம், எம்.எல்.ஏ.வின் நிறுவனத்துக்கு முறைகேடாக அதிகளவில் பணம் பரிமாற்றம் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதையடுத்து அமலாக்கத்துறை ஹித்தேந்திர தாக்கூர் எம்.எல்.ஏ. நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மெகுல் தாக்கூர், பட்டயக்கணக்காளர் கோபால் சதுர்வேதி ஆகியோரை கைது செய்து உள்ளனர்.