கோவில்பட்டியில் கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து: 2 பேர் பலி

திருநெல்வேலி என்.ஜி.ஓ. காலனியை சேர்ந்த ஒரு தம்பதி, சிவகாசியில் நடந்த ஒரு விபத்தில் காயமடைந்த உறவினரை பார்ப்பதற்காக தங்களது காரில் சென்றனர்.
கோவில்பட்டியில் கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து: 2 பேர் பலி
Published on

திருநெல்வேலி என்.ஜி.ஓ. காலனியை சேர்ந்த தம்பதி ராதாகிருஷ்ணன் (வயது 62), கவிதா(55). இவர்கள் சிவகாசியில் நடந்த ஒரு விபத்தில் காயமடைந்த உறவினரை பார்ப்பதற்காக நேற்று காலையில் தங்களது காரில் சென்றனர். காரை திருநெல்வேலியைச் சேர்ந்த முத்துக்குமார்(47) என்பவர் ஓட்டினார்.

பின்னர் அவர்கள் மாலையில் திருநெல்வேலிக்கு காரில் திரும்பி சென்று கொண்டிருந்தபோது, கோவில்பட்டி புறவழிச்சாலையில் பெரிய திருப்பம் பகுதியில் எதிர் திசையில் வந்த கார் கட்டுப்பாட்டை இழந்து தடுப்பு சுவரை உடைத்துக் கொண்டு, இவர்களது கார் மீது மோதியதாக கூறப்படுகிறது.

இதில் கார் உருக்குலைந்து சம்பவ இடத்திலேயே முத்துக்குமார் உயிரிழந்தார். இடிபாடுகளுக்குள் சிக்கியிருந்த ராதாகிருஷ்ணன், காயமடைந்த அவரது மனைவி, எதிர் திசையில் வந்த காரின் ஓட்டுநர் மந்திரமூர்த்தி ஆகியோரை கோவில்பட்டி தீயணைப்பு நிலைய வீரர்கள் மீட்டு, அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

அங்கு சிறிது நேரத்தில் ராதாகிருஷ்ணன் உயிரிழந்தார். இந்த விபத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுகுறித்து கோவில்பட்டி மேற்கு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

X

Daily Thanthi
www.dailythanthi.com