வெள்ளிமலை வனப்பகுதியில் கனமழை: மூல வைகை ஆற்றில் நீர்வரத்து

வெள்ளிமலை வனப்பகுதியில் கனமழை கொட்டியதால் மூல வைகை ஆற்றில் நீர்வரத்து ஏற்பட்டுள்ளது. கம்பத்தில் குடியிருப்புக்குள் தண்ணீர் புகுந்தது.
வெள்ளிமலை வனப்பகுதியில் கனமழை: மூல வைகை ஆற்றில் நீர்வரத்து
Published on

கடமலைக்குண்டு,

கடமலை-மயிலை ஒன்றியம் வெள்ளிமலை வனப்பகுதியில் மூல வைகை ஆறு உற்பத்தியாகிறது. கடந்த சில மாதங்களாக வெள்ளிமலை வனப்பகுதியில் போதிய அளவு மழை பெய்யவில்லை. இதனால் மூல வைகை ஆற்றில் நீர்வரத்து இல்லாமல் வறண்டு காணப்பட்டது. இந்த நிலையில் கடமலை-மயிலை ஒன்றியத்தில் நேற்று கனமழை கொட்டி தீர்த்தது.

குறிப்பாக வெள்ளிமலை வனப்பகுதியில் விடிய, விடிய பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக நீண்ட நாட்களுக்கு பிறகு மூல வைகை ஆற்றில் நீர்வரத்து ஏற்பட்டது. ஆற்றில் பெருக்கெடுத்து ஓடும் தண்ணீர் வருசநாடு கிராமத்தை வந்தடைந்தது. தொடர்ந்து வெள்ளிமலை வனப்பகுதியில் சாரல் மழை பெய்து வருகிறது. இதனால் மூல வைகை ஆற்றில் நீர்வரத்து மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது.

இதற்கிடையே ஆற்றில் தண்ணீர் ஓடுவதால் கடமலைக்குண்டு, மயிலாடும்பாறை ஆகிய கிராமங்களில் நிலவும் குடிநீர் தட்டுப்பாடு நீங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கொட்டக்குடி ஆறு

இதேபோல் போடி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான கொட்டக்குடி, குரங்கணி, முட்டம், கொம்பு தூக்கி, போடி மெட்டு, முந்தல் ஆகிய பகுதிகளில் நேற்று முன்தினம் நள்ளிரவில் பலத்த மழை பெய்தது. இதன் எதிரொலியாக கொட்டக்குடி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்துள்ளது. மேலும் போடி அருகே முந்தல் சாலையில் உள்ள பிள்ளையார் தடுப்பணையில் தண்ணீர் அருவிபோல கொட்டியது. இதேபோல் போடி ராஜவாய்க்காலிலும் தண்ணீர் கரைபுரண்டு ஓடுகிறது. போடிமெட்டில் இருந்து 2 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பியல்ரா என்ற இடத்தில் புதிதாக கட்டப்பட்டு வந்த பாலம் தண்ணீரில் அடித்து செல்லப்பட்டது. இதனால் போடியில் இருந்து பூப்பாறை செல்லும் பஸ், லாரி போன்ற கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது.

வேன், ஜீப், கார்கள் மட்டுமே சென்று வந்தன. மழை காரணமாக போடி நகரின் பல்வேறு இடங்களில் மின்சாரம் தடைபட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த மின்சார துறையினர் சம்பவ இடத்துக்கு சென்று சீரமைத்தனர்.

குடியிருப்புக்குள் தண்ணீர்

இதேபோல் கம்பம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளிலும் நேற்று முன்தினம் கனமழை பெய்தது. இதனால் மலையடிவாரத்தில் இருந்து பெருக்கெடுத்து ஓடிய தண்ணீர், குமுளி தேசிய நெடுஞ்சாலையில் பொதுப்பணித்துறை அலுவலகம் அருகே புதிய பாலம் கட்டுகிற இடத்தில் சாக்கடை கால்வாயில் சென்று கழிவுநீருடன் கலந்தது.

பாலத்தின் இருபுறத்திலும் ஆக்கிரமிப்பை அகற்றாததால், ஓடைக்கு செல்ல வழியின்றி பொதுப்பணித்துறை கட்டிட வளாகத்தில் தண்ணீர் சூழ்ந்தது. இதுமட்டுமின்றி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகம், வனச்சரகர் அலுவலக சாலையில் உள்ள குடியிருப்புகள், தனியார் மருத்துவமனை ஆகியவற்றுக்குள் தண்ணீர் புகுந்தது. மின்மோட்டார் மூலம் அந்த தண்ணீரை அவர்கள் அகற்றினர்.

எனவே பொதுமக்களின் நலனை கருத்தில் கொண்டு சாக்கடை கால்வாயை தூர்வார வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. மேலும் புதிய பாலம் கட்டுகிற இடத்தில் உள்ள ஆக்கிரமிப்பை முழுமையாக அகற்ற வேண்டும். மலையடிவாரத்தில் இருந்து பெருக்கெடுத்து ஓடும் மழைநீர், சின்னவாய்க்காலில் போய் சேர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆண்டிப்பட்டி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் இடியுடன் கூடிய பலத்த மழை பெய்தது. வருசநாடு அருகே உள்ள காந்தி கிராமத்தில் பயங்கர சத்தத்துடன் மின்னல் தாக்கியது. இதில், அந்த கிராமத்தில் குடியிருப்புக்கு மத்தியில் இருந்த ஒரு மின்சார கம்பம் அடியோடு சாய்ந்து வீட்டின் மேல் விழுந்தது.

இதில், மின்சாரம் பாய்ந்து ஒரு கன்றுக்குட்டி பரிதாபமாக இறந்தது. இதனைக்கண்ட அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் அந்த கிராமத்தை சேர்ந்தவர்கள், டிரான்ஸ்பார்மருக்கு சென்று மின்சாரத்தை துண்டித்து விட்டனர். இதனால் அந்த பகுதியில் மின்சாரத்தால் ஏற்பட இருந்த பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

இதேபோல் மின்னல் தாக்கியதில், அந்த கிராமத்தில் மூல வைகை ஆற்றங்கரையில் இருந்த பழமை வாய்ந்த ஒரு மரம் வேரோடு சாய்ந்தது. சுமார் 3 மணிநேரத்துக்கும் மேலாக மழை நீடித்ததால் ஆங்காங்கே மின்சார வினியோகம் தடைபட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த மின்சார துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர். ஆனால் மின்கம்பம் சாய்ந்து விழுந்த காந்திகிராமத்துக்கு மின்வாரிய அதிகாரிகள் யாரும் வரவில்லை என்று அப்பகுதி மக்கள் புகார் கூறினர்.

ஆண்டிப்பட்டி அருகே உள்ள ஆசாரிபட்டி கிராமத்திலும் பலத்த மழை பெய்தது. இங்கு போதிய வடிகால் வசதி கிடையாது. இதனால் பெருக்கெடுத்து ஓடிய மழைநீர், ஆசாரிபட்டி-ரோசனபட்டி சாலையில் குளம்போல தேங்கி நின்றது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர்.

குறிப்பாக மோட்டார் சைக்கிளில் செல்வோர், நிலைதடுமாறி கீழே விழுந்து காயம் அடைந்தனர். இதேபோல் ஆசாரிபட்டி அரசு உயர்நிலைப்பள்ளி முன்பு தண்ணீர் தேங்கியது. ஒரே இடத்தில் தண்ணீர் தேங்கி நிற்பதால் கொசுக்கள் உற்பத்தி அதிகரித்து, தொற்றுநோய்கள் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com