நீர்வரத்து வினாடிக்கு 1.10 லட்சம் கனஅடியாக குறைந்தது ஒகேனக்கல்லில் வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து வினாடிக்கு 1.10 லட்சம் கனஅடியாக குறைந்துள்ளது. மேலும் வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது.
நீர்வரத்து வினாடிக்கு 1.10 லட்சம் கனஅடியாக குறைந்தது ஒகேனக்கல்லில் வீடுகளை வெள்ளம் சூழ்ந்தது
Published on

பென்னாகரம்,

கர்நாடகா மற்றும் கேரளா மாநிலங்களில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதனால் கர்நாடக மாநிலத்தில் உள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பின. இதனால் அந்த 2 அணைகளில் இருந்து உபரிநீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டது. அதன்படி நேற்று முன்தினம் ஒகேனக்கல் காவிரி ஆற்றில் வினாடிக்கு 1 லட்சத்து 25 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது. இதனால் ஒகேனக்கல்லில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு மெயின் அருவி, ஐந்தருவி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.

ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்ததால் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டது. காவிரி ஆற்றில் பரிசல் இயக்கவும், அருவியில் குளிக்கவும் விதிக்கப்பட்ட தடை தொடர்ந்து நீடிக்கிறது. மேலும் காவிரி ஆற்றில் வரும்

தண்ணீரை மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் கர்நாடக-தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் விசைப்படகில் சென்று அளந்து கண்காணித்தனர்.

இந்த நிலையில் நேற்று அதிகாலை முதல் ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து படிப்படியாக குறையத்தொடங்கியது. இந்த நீர்வரத்து காலை 9 மணி நிலவரப்படி வினாடிக்கு 1 லட்சத்து 18 ஆயிரம் கனஅடியாக குறைந்தது. விடுமுறை நாள் என்பதால் நேற்று ஒகேனக்கல்லுக்கு சுற்றுலா பயணிகள் அரசு பஸ்களில் வந்தனர். அவர்கள் மெயின் அருவிக்கு செல்லும் நடைபாதை நுழைவுவாயில் மற்றும் முதலைப்பண்ணை உள்ளிட்ட பகுதிகளுக்கு சென்று காவிரி ஆற்றில் பெருக்கெடுத்து ஓடும் தண்ணீரின் இயற்கை அழகை கண்டு ரசித்தனர்.

ஒகேனக்கல்லுக்கு கார், இருசக்கர வாகனங்களில் வந்த சுற்றுலா பயணிகளை மடம் கிராமத்தில் உள்ள சோதனைச்சாவடியிலேயே போலீசார் தடுத்து நிறுத்தி திரும்பி அனுப்பினர். மேலும் ஒகேனக்கல்லில் இருந்த சுற்றுலா பயணிகளை போலீசார் வெளியேறுமாறு அறிவுறுத்தினர். இதனால் அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். இதனிடையே நேற்று மாலை 6 மணி நிலவரப்படி ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 1 லட்சத்து 10 ஆயிரம் கனஅடியாக குறைந்தது. இந்த நீர்வரத்து மேலும் குறைய வாய்ப்பு உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

காவிரி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதால் ஒகேனக்கல், ஊட்டமலை, நாடார் கொட்டாய், நாகமரை உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் மற்றும் வருவாய்த்துறையினர் தீவிர ரோந்து சென்று கண்காணித்து வருகின்றனர். மேலும் தண்டோரா மூலம் தொடர்ந்து வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். ஒகேனக்கல் முதலைப்பண்ணை பகுதியில் உள்ள வீடுகளை வெள்ளம் சூழ்ந்ததால் பொதுமக்கள் வெளியேற்றப்பட்டனர். சுமார் 10-க்கும் மேற்பட்ட வீடுகளை வெள்ளம் சூழ்ந்துள்ளதாகவும், அங்குள்ளவர்கள் பாதுகாப்பான இடத்துக்கு இடமாற்றப்பட்டதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com