சர்க்கரை ஏற்றுமதி தடை ஓராண்டுக்கு நீட்டிப்பு; மத்திய அரசு நடவடிக்கை

சர்க்கரை ஏற்றுமதிக்கான தடையை மத்திய அரசு 2023-ம் ஆண்டு அக்டோபர் 31-ந்தேதி வரை ஓராண்டுக்கு நீட்டித்து உள்ளது.
சர்க்கரை ஏற்றுமதி தடை ஓராண்டுக்கு நீட்டிப்பு; மத்திய அரசு நடவடிக்கை
Published on

புதுடெல்லி,

உலகில் அதிக அளவு சர்க்கரை உற்பத்தி செய்யும் நாடுகளின் வரிசையில் இந்தியா முன்னணியில் உள்ளது. எனினும், உள்நாட்டில் சர்க்கரையின் தேவையை கருத்தில் கொண்டு, ஏற்றுமதிக்கான தடையை விதிக்க மத்திய அரசு முடிவு செய்தது.

இதுபற்றி மத்திய உணவு மற்றும் பொது வினியோக துறை செயலர் சுதான்ஷூ பாண்டே கடந்த மே மாதம் கூறும்போது, வருகிற அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் விழாக்காலம் வரவுள்ளது. அதனால், உள்நாட்டின் தேவையை கவனத்தில் கொண்டு, ஏற்றுமதிக்கு தடை விதிக்கப்படுகிறது என கூறினார்.

இதன்படி, கடந்த ஜூன் 1-ந்தேதி முதல் அக்டோபர் 31-ந்தேதி வரை இந்த தடை அமலுக்கு வந்தது. இந்த சூழலில், சர்க்கரை ஏற்றுமதிக்கான தடையை மத்திய அரசு 2023-ம் ஆண்டு அக்டோபர் 31-ந்தேதி வரை ஓராண்டுக்கு நீட்டித்து உள்ளது.

சர்க்கரை விலை நிலையாக இருப்பதற்காக இந்த தடையை விதிக்க முடிவு செய்யப்பட்டு உள்ளது என்று கூறப்படுகிறது. இதனை வெளிநாட்டு வர்த்தகத்துக்கான பொது இயக்குனரகம் வெளியிட்டு உள்ள அறிவிப்பு தெரிவிக்கின்றது.

எனினும், ஐரோப்பிய யூனியன் மற்றும் அமெரிக்கா நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும், சர்க்கரைக்கு பதிலாக சுவையை கூட்ட கூடிய இனிப்பூட்டிகளின் (மூலப்பொருளாக உள்ள, பதப்படுத்தப்பட்ட மற்றும் வெள்ளை நிற) ஏற்றுமதிகளுக்கு இந்த தடை கிடையாது என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com