லாரன்ஸ் பிஷ்னோயை சுட்டுக் கொல்பவருக்கு ரூ.1 கோடி பரிசு அறிவித்த கர்னி சேனா

சிறையில் இருக்கும் லாரன்ஸ் பிஷ்னோயை சுட்டுக் கொல்பவருக்கு ரூ.1 கோடி பரிசு வழங்குவதாக கர்னி சேனா அறிவித்துள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்
Published on

அமிர்தசரஸ்,

எல்லை தாண்டிய போதைப்பொருள் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட லாரன்ஸ் பிஷ்னோய், தற்போது குஜராத் சபர்மதி சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். கடந்த ஏப்ரல் மாதம் மும்பையில் உள்ள பாலிவுட் நடிகர் சல்மான் கானின் வீட்டிற்கு வெளியே, துப்பாக்கிச் சூடு நடத்திய வழக்கிலும் அவர் பெயர் குறிப்பிடப்பட்டது. ஆனால் மும்பை போலீசார் அவர்மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.

முன்னதாக, கடந்த அக்டோபர் 14-ம் தேதி, மராட்டிய முன்னாள் அமைச்சர் பாபா சித்திக்கை, அவரது மகன் சிஷான் சித்திக்கின் அலுவலகத்துக்கு வெளியே இரவு மூன்று பேர் வழிமறித்து துப்பாக்கியால் சுட்டனர். இதில் படுகாயமடைந்த அவர், உடனடியாகத் தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டு அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்த வழக்கில், கொலையாளிகள் என சந்தேகிக்கப்படும் அரியானாவைச் சேர்ந்த குர்மைல் பல்ஜீத் சிங், உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த தர்மராஜ் ராஜேஷ் காஷ்யப் ஆகியோரை போலீசார், உடனடியாக கைது செய்தனர். பாபா சித்திக் கொலைக்கு முழு பொறுப்பேற்பதாக லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் முகநூல் பக்கத்தில் பதிவிட்டது.

இந்நிலையில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள லாரன்ஸ் பிஷ்னோயை என்கவுன்டர் செய்யும் போலீஸ் அதிகாரிக்கு வெகுமதி அளிப்பதாக சத்திய கர்னி சேனா அமைப்பு அறிவித்துள்ளது. இதுகுறித்து சத்ரிய கர்னி சேனாவின் தேசியத் தலைவர் ராஜ் செகாவத், "லாரன்ஸ் பிஷ்னோயை கொல்லும் எந்த ஒரு போலீஸ் அதிகாரிக்கும் ரூ.1,11,11,111 வெகுமதியாக வழங்கப்படும்" என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக ஜெய்ப்பூரில் ராஷ்ட்ரிய ராஜ்புத் கர்னிசேனா அமைப்பின் தலைவர் சுக்தேவ் சிங் கொகாமடி கடந்த 2023ம் ஆண்டு டிசம்பரில் கொல்லப்பட்டார். அவரது படுகொலைக்கு பிஷ்னோய் கும்பல் பொறுப்பேற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com