

ராய்ப்பூர்,
சத்தீஸ்காரின் சுக்மா, தண்டேவாடா உள்ளிட்ட மாவட்டங்கள் மாவோயிஸ்டுகளின் ஆதிக்கம் நிறைந்த பகுதியாகும். இங்குள்ள அடர் காட்டுப்பகுதிகளில் மறைந்து வாழும் மாவோயிஸ்டுகள் அடிக்கடி பாதுகாப்பு படையினர் மீதும், பொதுமக்கள் மீதும் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.
இந்த பகுதிகளில் மாவோயிஸ்டுகளின் ஆதிக்கத்தை ஒடுக்குவதற்காக மாநில போலீசார் தீவிர நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அவர்களுக்கு உதவியாக மத்திய ரிசர்வ் போலீஸ் படையை (சி.ஆர்.பி.எப்.) சேர்ந்த கமாண்டோ படைப்பிரிவு (கோப்ரா) ஒன்றும் கடந்த சில ஆண்டுகளாக களமிறக்கப்பட்டு உள்ளது.
அதாவது சி.ஆர்.பி.எப்.பின் ஒரு பிரிவை கமாண்டோ படையாக தரம் உயர்த்தி சத்தீஸ்காரில் மாவோயிஸ்டுகளின் ஆதிக்கம் நிறைந்த பகுதிகளில் பணியமர்த்தப்பட்டு உள்ளது. இவர்கள் மாநில போலீசாருடன் இணைந்து தீவிர ரோந்து மற்றும் கண்காணிப்பு பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்தநிலையில் சுக்மா மாவட்டத்தின் சிந்தல்நார் காட்டுப்பகுதியில் சி.ஆர்.பி.எப்.பின் மேலும் 5 படைப்பிரிவை களமிறக்குவதற்காக அங்கு புதிய முகாம்கள் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. எனவே இந்த பகுதியில் உள்ளூர் போலீசாருடன் இணைந்து நேற்று முன்தினம் இரவு கோப்ரா படைப்பிரிவினர் ரோந்து பணிகளை மேற்கொண்டிருந்தனர்.
அப்போது, தாங்கள் அங்கே மறைத்து வைத்திருந்த சக்தி வாய்ந்த வெடிகுண்டு ஒன்றை மாவோயிஸ்டுகள் வெடிக்க செய்தனர். இதில் கோப்ரா படைப்பிரிவை சேர்ந்த 10 வீரர்கள் படுகாயமடைந்தனர். இரவு சுமார் 9 மணியளவில் இந்த பயங்கர சம்பவத்தால் அந்த காட்டுப்பகுதியில் பெரும் அதிர்ச்சியும், பரபரப்பும் ஏற்பட்டது.
உடனே இந்த சம்பவம் குறித்து சி.ஆர்.பி.எப். உயர் அதிகாரிகளுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற உயர் அதிகாரிகள், குண்டுவெடிப்பில் காயமடைந்த வீரர்களை விமானப்படை ஹெலிகாப்டர் மூலம் மீட்டு ராய்ப்பூர் மற்றும் சிந்தல்நார் பகுதிகளில் உள்ள ஆஸ்பத்திரிகளில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.
நள்ளிரவில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்ட அந்த வீரர்களுக்கு ஆஸ்பத்திரிகளில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும் கோப்ரா படையின் துணை கமாண்டரான நிதின் பலேராவ் (வயது 33) என்பவர் சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலையில் பலியானார். மீதமுள்ள 9 வீரர்களுக்கும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
மாவோயிஸ்டுகள் நிகழ்த்திய குண்டுவெடிப்பில் உயிரிழந்த கமாண்டோ அதிகாரி மராட்டியம் மாநிலம் நாசிக்கை சேர்ந்தவர் ஆவார். கடந்த 2010-ம் ஆண்டு சி.ஆர்.பி.எப்.பில் சேர்ந்த அவர், கடந்த ஆண்டுதான் கோப்ரா படைப்பிரிவுக்கு மாற்றப்பட்டு இருந்தார். பலேராவின் உடல் பிரேத பரிசோதனைக்குப்பின் அவரது சொந்த ஊருக்கு கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகளை சி.ஆர்.பி.எப். அதிகாரிகள் எடுத்துள்ளனர்.
இதற்கிடையே சம்பவம் நடந்த பகுதிகளில் கூடுதல் வீரர்கள் குவிக்கப்பட்டு மாவோயிஸ்டுகளுக்கு எதிரான தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது. இந்த குண்டு வெடிப்பு சம்பவத்தால் சுக்மா மாவட்டம் முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது.