உத்தர பிரதேசம்: மருத்துவமனையில் தீ விபத்து; 10 பச்சிளம் குழந்தைகள் உயிரிழப்பு

மின்கசிவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
உத்தர பிரதேசம்: மருத்துவமனையில் தீ விபத்து; 10 பச்சிளம் குழந்தைகள் உயிரிழப்பு
Published on

லக்னோ,

உத்தர பிரதேச மாநிலம் ஜான்சி மாவட்டத்தில் உள்ள மகாராணி லட்சுமி பாய் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் குழந்தைகள் பராமரிப்புப் வார்டில் வெள்ளிக்கிழமை இரவு 10.45 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

தகவலறிந்து தீயணைப்புத் துறை மற்றும் ராணுவ தீயணைப்பு வாகனம் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை கட்டுக்குள் கொண்டு வரும் பணியில் ஈடுபட்டன. எனினும் தீயில் கருகியும், கரும்புகை காரணமாக மூச்சுத் திணறல் ஏற்பட்டும் 10 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 37 குழந்தைகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டன. உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது.

ஷார்ட் சர்க்யூட் மின்கசிவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவத்துக்கு மிகுந்த வேதனை தெரிவித்துள்ள மாநில முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத், மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

மேலும், இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி 12 மணி நேரத்தில் அறிக்கை தாக்கல் செய்ய ஜான்சி வட்டாட்சியருக்கும், காவல் துறை டிஐஜி-க்கு யோகி ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். உத்தர பிரதேசத்தில் மருத்துவமனையில் தீ விபத்து காரணமாக 10 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com