இந்த ஆண்டு இறுதிக்குள் ரூ.6 ஆயிரம் நிதி உதவி வழங்கும் திட்டத்தில் 10 கோடி விவசாயிகள் - மத்திய மந்திரி தகவல்

ரூ.6 ஆயிரம் நிதி உதவி வழங்கும் திட்டத்தில் இந்த ஆண்டு இறுதிக்குள் 10 கோடி விவசாயிகள் சேர்க்கப்படுவார்கள் என்று மத்திய மந்திரி நரேந்திரசிங் தோமர் கூறினார்.
இந்த ஆண்டு இறுதிக்குள் ரூ.6 ஆயிரம் நிதி உதவி வழங்கும் திட்டத்தில் 10 கோடி விவசாயிகள் - மத்திய மந்திரி தகவல்
Published on

புதுடெல்லி,

மத்திய அரசு கடந்த பிப்ரவரி மாதம் 2 ஹெக்டேர் வரை நிலம் வைத்துள்ள 12.5 கோடி விவசாயிகளுக்கு வருடத்துக்கு ரூ.6 ஆயிரம் நிதி உதவி 3 தவணைகளாக வழங்கப்படும் என அறிவித்தது. பின்னர் இந்த திட்டம் நில அளவுகோல் இன்றி அனைத்து விவசாயிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டது. இதன்மூலம் 14.5 கோடி விவசாயிகள் பலனடைவார்கள் என்றும், இதற்கு ரூ.87,217.50 கோடி செலவாகும் என்றும் திட்டமிடப்பட்டது.

சிறு விவசாயிகள் 60 வயதை அடையும்போது அவர்களுக்கு மாதம் ரூ.3 ஆயிரம் ஓய்வூதியம் வழங்கப்படும் என மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டது. அதன்படி நாடு முழுவதும் நேற்று விவசாயிகள் இந்த ஓய்வூதிய திட்டத்தில் பதிவு செய்யும் பணிகள் தொடங்கியது. டெல்லியில் இந்த பணியை மத்திய வேளாண் மந்திரி நரேந்திரசிங் தோமர் நேற்று தொடங்கிவைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் வேளாண் மந்திரி நரேந்திரசிங் தோமர் கூறியதாவது:-

மேற்குவங்காளம் தவிர மற்ற அனைத்து மாநிலங்களும் விவசாயிகள் நிதியுதவி திட்டத்தை செயல்படுத்தி வருகின்றன. இந்த திட்டத்தில் 5.88 கோடி விவசாயிகள் முதல் தவணையாக ரூ.2 ஆயிரம் பெற்றுள்ளனர். 2-வது தவணையை 3.40 கோடி விவசாயிகள் பெற்றுள்ளனர். இந்த ஆண்டு இறுதிக்குள் இந்த திட்டத்தில் 10 கோடி விவசாயிகளை சேர்க்க இலக்கு நிர்ணயித்துள்ளோம்.

ஓய்வுதிய திட்டத்தில் விவசாயிகளை பதிவு செய்யும் பணி தொடங்கியுள்ளது. அதிகமான விவசாயிகள் இந்த திட்டத்தில் இணைய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இந்த திட்டம் காஷ்மீர், லடாக் உள்பட நாடு முழுவதும் அமல்படுத்தப்படும்.

அடுத்த 5 ஆண்டுகளில் விவசாயிகளின் வருமானத்தை இரட்டிப்பாக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்துவருகிறது. விவசாயிகளுக்கு அனைத்து முக்கிய திட்டங்களும் சென்றடைய வேண்டும் என்பதற்கான முயற்சியை எடுத்துவருகிறது. இதுதொடர்பாக அனைத்து மாநில அரசுகளையும் வலியுறுத்தி வருகிறது.

ஓய்வூதிய திட்டத்தில் 18 முதல் 40 வயதுள்ள சிறு விவசாயிகள் இணையலாம். விவசாயிகள் நிதியுதவி திட்டத்தில் பலனடையும் அனைத்து விவசாயிகளும் ஓய்வூதிய திட்டத்தில் சேருவதற்கு தகுதியுடையவர்கள். விவசாயிகள் முதலில் பதிவு செய்யும் பணிகள் பொது சேவை மையங்கள் மூலம் மேற்கொள்ளப்படுகிறது.

விவசாயிகள் மாதாந்திர பங்கு தொகையாக ரூ.55 முதல் ரூ.200 வரை (வயதுக்கேற்ப) செலுத்த வேண்டும். அதற்கு இணையான தொகையை மத்திய அரசு செலுத்தும். அவர்கள் ஓய்வுபெறும்போது ஓய்வூதிய நிதி வழங்கப்படும். ஓய்வூதியம் பெறுபவர் இறந்துவிட்டால் அவரது மனைவி அல்லது கணவருக்கு 50 சதவீத ஓய்வூதியம் வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com