கொரோனா பரவலை கட்டுப்படுத்த 10 கோடி இலவச கோவிஷீல்டு டோஸ்கள்... சீரம் இந்தியா தகவல்

நாட்டில் அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த 10 கோடி இலவச கோவிஷீல்டு தடுப்பூசி டோஸ்களை பயன்படுத்தி கொள்ள வேண்டும் என மத்திய அரசை சீரம் இந்தியா வலியுறுத்தி உள்ளது.
கொரோனா பரவலை கட்டுப்படுத்த 10 கோடி இலவச கோவிஷீல்டு டோஸ்கள்... சீரம் இந்தியா தகவல்
Published on

புதுடெல்லி,

நாட்டில் கொரோனா பெருந்தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நோக்கில் கடந்த ஆண்டு ஜனவரி 16ந்தேதி முதல் இந்தியாவில் உலகின் மிகப்பெரிய கொரோனா தடுப்பூசி திட்டம் செயல்படத்தொடங்கி பல்வேறு கட்டங்களாக விரிவுபடுத்தப்பட்டது.

கடந்த ஆண்டு ஏப்ரல் 1ந்தேதி முதல் 45 வயது கடந்த அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டது. பின்னர் மே 1ந்தேதி முதல் 18 வயது பூர்த்தியான அனைவருக்கும் தடுப்பூசி போடும் பணிகள் தொடங்கி நடந்து வருகின்றன. கடந்த ஜனவரி 3ந்தேதி முதல் 15 முதல் 18 வயது வரையிலான அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

இதுதவிர, 12 முதல் 14 வயது வரையிலான சிறுவர், சிறுமிகளுக்கும் கடந்த மார்ச் 16ந்தேதி முதல் தடுப்பூசி போடப்பட்டு வருகின்றன.

முன் எச்சரிக்கை டோஸ் என்ற பெயரில் பூஸ்டர் தடுப்பூசி டோஸ்களும் போடப்பட்டு வருகின்றன. இதன்படி, மார்ச் 16ந்தேதி முதல் 60 வயதுக்கு கூடுதலான அனைவரும் இந்த தடுப்பூசியை போட்டு கொள்ள அனுமதி அளிக்கப்பட்டு உள்ளது.

நாட்டில் சமீப நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதனை கவனத்தில் கொண்டு, இலவச அடிப்படையில் வழங்கப்பட்டு உள்ள 10 கோடி கோவிஷீல்டு தடுப்பூசிகளை பயன்படுத்தி கொள்ளும்படி சீரம் இந்தியா அமைப்பு, மத்திய அரசை வலியுறுத்தி உள்ளது.

புனேவை அடிப்படையாக கொண்டு செயல்படும் இந்த அமைப்பு, அதுபற்றி மத்திய சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகத்திற்கு எழுதியுள்ள கடிதத்தில், இந்த 10 கோடி இலவச கோவிஷீல்டு தடுப்பூசி டோஸ்களை மத்திய அரசு சரியான நேரத்தில் எடுத்து கொள்ளாவிட்டால், பெருந்தொற்று பரவும் நேரத்தில் உயிர்காக்கும் தடுப்பூசிகள் வீணாவதற்கு வழிவகுத்து விடும் என தெரிவித்து உள்ளது.

இதற்கு முன், 14 கோடி இலவச கோவிஷீல்டு தடுப்பூசி டோஸ்களை, யுனிசெப் அமைப்பு வழியாக மத்திய அரசுக்கு சீரம் அமைப்பு வழங்கியுள்ளது என்று சுட்டி காட்டிய சீரம் அமைப்பின் இயக்குனர் பிரகாஷ், இதுதவிர்த்து 10 கோடி இலவச கோவிஷீல்டு தடுப்பூசி டோஸ்களும் வழங்கப்பட்டு உள்ளன என தெரிவித்து உள்ளார்.

இதனை நமது நாட்டு மக்களுக்காக உரிய நேரத்தில் எடுத்து கொண்டால், உயர்ந்து வரும் கொரோனா பாதிப்புகளை கட்டுப்படுத்துவதற்கும், நமது பிரதமர் மோடியின் தலைமையிலான உலகின் மிக பெரிய கொரோனா தடுப்பூசி இயக்கம் முழு அளவில் வெற்றி பெறுவதற்கும் ஒரு முக்கிய பங்காற்றும் என்று அவர் தெரிவித்து உள்ளார்.

நாட்டில் இதுவரை மொத்தம் 187.67 கோடி கொரோனா தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டு உள்ளன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com