

டெல்லி,
உக்ரைன், ரஷியா போர் இன்று 1 ஆயிரத்து 521வது நாளாக நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.
இதனிடையே, இந்த போரில் ரஷிய ராணுவத்துடன் இணைந்து உக்ரைனுக்கு எதிராக சண்டையிட இந்தியர்கள் வலுக்கட்டாயமாக ஈடுபடுத்தப்படும் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன.
இந்நிலையில், வேலைக்காக அழைத்து செல்லப்பட்டு ரஷிய ராணுவத்தில் உக்ரைனுக்கு எதிரான போரில் 26 இந்தியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும், அவர்களின் நிலை என்ன? என்பது குறித்தும் அவர்களை மீட்பது குறித்தும் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனு சுப்ரீம் கோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணையின்போது உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷிய ராணுவத்துடன் இணைந்து சண்டையிட்ட இந்தியர்களில் 10 பேர் உயிரிழந்துவிட்டதாகவும், அவர்களின் உடல்களை சொந்த ஊர்களுக்கு கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும், எஞ்சிய இந்தியர்களை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.