10 கிலோ அரிசி வழங்கும் திட்டம் தள்ளிப்போகிறது?

மத்திய அரசு அரிசி கொடுக்க மறுப்பதால் ஆகஸ்டு 1-ந் தேதிக்குள் 10 கிலோ அரிசி திட்டம் தொடங்கப்படும் என்று மந்திரி கே.எச். முனியப்பா கூறியுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
10 கிலோ அரிசி வழங்கும் திட்டம் தள்ளிப்போகிறது?
Published on

பெங்களூரு:-

பெங்களூருவில் நேற்று உணவு மற்றும் பொது வினியோகத்துறை மந்திரி கே.எச்.முனியப்பா நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

மத்திய அரசு மறுப்பு

சட்டசபை தேர்தலுக்கு முன்பாக காங்கிரஸ் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. பி.பி.எல். குடும்ப அட்டைதாரர்களுக்கு மாதந்தோறும் 10 கிலோ இலவச அரிசி திட்டம் வழங்கும் திட்டத்தை நிறைவேற்றுவது குறித்து கடவுளிடம் வேண்டிக் கொண்டேன். ஏனெனில் அன்ன பாக்ய திட்டத்தின் கீழ் ஏழைகளுக்கு 10 கிலோ அரிசி வழங்கும் திட்டத்தை நிறைவேற்றும் விவகாரத்தில் மத்திய அரசு அரசியல் செய்கிறது.

மத்திய அரசிடம் 7 லட்சம் டன் அரிசி இருப்பு இருக்கிறது. முதலில் கர்நாடகத்திற்கு 2 லட்சம் டன் அரிசி கொடுப்பதாக கூறிவிட்டு, மறுநாளே அரிசி தர மறுத்து விட்டது. என்றாலும், மத்திய அரசிடம் இருந்து அரிசியை வாங்கி ஏழை மக்களுக்கு கொடுக்க முதல்-மந்திரி சித்தராமையா டெல்லியில் மத்திய மந்திரிகளை சந்தித்து பேசி உள்ளார். நானும் டெல்லியில் 3 நாட்கள் தங்கி இருந்து மத்திய மந்திரி பியூஸ் கோயலை சந்தித்து அரிசி வழங்கும் விவகாரம் குறித்து பேச முடிவு செய்தேன்.

ஆகஸ்டு 1-ந் தேதிக்குள்...

ஆனால் அவரை சந்திக்க எனக்கு காலஅவகாசம் கொடுக்கவில்லை. அவர் டெல்லியில் இல்லை என்று அதிகாரிகள் கூறினார்கள். மத்திய அரசு இலவச அரிசி வழங்க மறுத்தாலும், நாங்கள் கொடுத்த வாக்குறுதியின்படி அன்ன பாக்ய திட்டத்தை நிறைவேற்றியே தீருவோம். ஜூலை 1-ந் தேதி முதல் அன்ன பாக்ய திட்டத்தை தொடங்க சாத்தியமில்லை. அரிசி பெறுவதற்காக மத்திய அரசிடமும், மற்ற மாநில அரசுகளுடனும் தொடர்ந்து பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.

அதனால் வருகிற ஆகஸ்டு 1-ந் தேதிக்குள் பி.பி.எல். அட்டைதாரர்களுக்கு 10 கிலோ இலவச அரிசி வழங்கும் அன்ன பாக்ய திட்டம் தொடங்கப்படும். இந்த திட்டத்தை நிறைவேற்றுவதற்காக நிதி பிரச்சினை எதுவும் இல்லை. திட்டத்தை நிறைவேற்றுவதற்கான நிதியை ஒதுக்க தயாராக இருப்பதாக முதல்-மந்திரி சித்தராமையா, துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.

மக்கள் அதிர்ச்சி

10 கிலோ அரிசி வழங்கும் திட்டத்தை ஜூல 1-ந்தேதி தொடங்குவதாக முதல்-மந்திரி சித்தராமையா ஏற்கனவே அறிவித்த நிலையில், அந்தத்துறை மந்திரி கே.எச்.முனியப்பா, ஆகஸ்டு 1-ந்தேதிக்குள் 10 கிலோ அரிசி திட்டத்தை செயல்படுத்துவதாக கூறியிருப்பது மக்கள் மத்தியில் பரபரப்பையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com