

புதுடெல்லி,
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக உலக நாடுகளில் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதால், விமானம் உள்ளிட்ட போக்குவரத்து சேவைகள் நிறுத்திவைக்கப்பட்டன. இதனையடுத்து வெளிநாடுகளில் வசிக்கும் தங்கள் நாட்டு மக்களை அழைத்து வர அந்தந்த நாட்டு அரசுகள் சிறப்பு விமானங்களை அனுப்பி வைத்தன. இந்தியாவில் வந்தே பாரத் திட்டத்தின் மூலம் வெளிநாடுகளில் சிக்கிக் கொண்ட இந்தியர்களை தாயகம் அழைத்து வரும் பணி கடந்த மே 7 ஆம் தேதி தொடங்கி, பல்வேறு கட்டங்களாக மேற்கொள்ளப்பட்டது.
இந்நிலையில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் அனுராக் வஸ்தவா தனது ட்விட்டர் பதிவில், வந்தே பாரத் திட்டத்தின் கீழ் தாயகம் திரும்பிய இந்தியர்களின் எண்ணிக்கை 10 லட்சத்தைக் கடந்துள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை தாயகம் அழைத்து வரும் நடவடிக்கைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக தெரிவித்துள்ள அவர், சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சகம், உள்துறை மற்றும் சுகாதார அமைச்சகத்துடன் இணைந்து இப்பணியை மேற்கொண்டு வருவதாக குறிப்பிட்டுள்ளார்.