தந்தை புகைத்துவிட்டு போட்ட பீடி துண்டை விழுங்கிய 10 மாத ஆண் குழந்தை சாவு

தந்தை பீடி புகைப்பதற்கு அடிமையாகி இருந்தார்.
பெங்களூரு,
கர்நாடக மாநிலம் மங்களூரு டவுனில் அடையாறு பகுதியில் வசித்து வருபவர் லட்சுமி தேவி. இவரது கணவர் திருமண விழா அலங்கார பணியாளராக பணியாற்றி வருகிறார். இந்த தம்பதியின் சொந்த ஊர் பீகார் மாநிலம் ஆகும். இந்த தம்பதிக்கு அனீஷ் குமார் என்ற 10 மாத குழந்தை இருந்தது.
குழந்தையின் தந்தை பீடி புகைப்பதற்கு அடிமையாகி இருந்தார். இதனால் அவர் அவ்வப்போது பீடியை புகைத்துவிட்டு வீட்டுக்குள்ளேயே போட்டுவிட்டு சென்று வந்துள்ளார். அதுபோல் சம்பவத்தன்று அவர் புகைத்துவிட்டு பீடி துண்டை வீட்டில் போட்டுள்ளார். அதை அவரது 10 மாத குழந்தை வாயில் எடுத்து போட்டு விழுங்கியுள்ளது. இதில் தொண்டையில் பீடி துண்டு சிக்கி குழந்தைக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டது.
உடனே தாயும், தந்தையும் குழந்தையை மங்களூரு வென்லாக் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இருப்பினும் சிகிச்சை பலனின்றி மறுநாள் காலை 10.30 மணி அளவில் அந்த குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. இதுகுறித்து குழந்தையின் தாய், மங்களூரு புறநகர் போலீசில் தனது கணவர் மீது பரபரப்பு புகார் அளித்துள்ளார்.
அதில், எனது கணவர் புகைத்துவிட்டு பீடி துண்டை வீட்டில் போட வேண்டாம் என்று கூறினேன். இருப்பினும் அவர் இதனை பொருட்படுத்தாமல் அலட்சியமாக பீடி துண்டை வீட்டுக்குள்ளேயே வீசி வந்தார். சம்பவத்தன்றும் அவர் அவ்வாறு புகைத்துவிட்டு வீசிய பீடி துண்டை எடுத்து எனது 10 மாத குழந்தை விழுங்கிவிட்டது. இதில் உடல் நலம் பாதித்து எனது குழந்தை உயிரிழந்துவிட்டது என குறிப்பிட்டுள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.






