

புவனேஸ்வர்,
ஒடிசா மாநிலம் கட்டாக் நகரில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் இன்று அதிகாலையில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 10 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
முன்னதாக இன்று அதிகாலை 3 மணியளவில் மருத்துவமனையில் உள்ள தீவிர சிகிச்சை பிரிவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதையடுத்து உடனடியாக தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டன. தீ விபத்து ஏற்பட்ட பகுதியில் சிகிச்சை பெற்று வந்த 23 நோயாளிகள் உடனடியாக வேறு அறைக்கு மாற்றப்பட்டனர். அவர்களில் 10 பேர் காயங்களால் உயிரிழந்தனர்.
மேலும் நோயாளிகளை மீட்கும் முயற்சியில் ஈடுபட்ட மருத்துவமனை ஊழியர்கள் உள்ளிட்ட 11-க்கும் மேற்பட்டவர்கள் இந்த விபத்தில் காயமடைந்தனர். தீ விபத்து குறித்து கேள்விப்பட்ட ஒடிசா மாநில முதல்-மந்திரி மோகன் சரண் மாஜி, சுகாதார மந்திரி முகேஷ் மஹாலிங்குடன் உடனடியாக மருத்துவமனைக்கு நேரில் சென்று ஆய்வு செய்தார்.
தீ விபத்தில் காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களை பார்வையிட்ட மோகன் சரண் அவர்களுக்கு முறையான சிகிச்சை அளிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். மேலும் இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று அறிவித்துள்ள மோகன் சரண் மாஜி, விபத்து குறித்து விசாரணை நடத்தப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.