10% இடஒதுக்கீடு விவகாரம்: பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

பொருளாதார ரீதியில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு 10% இடஒதுக்கீடு நிர்ணயிக்கப்பட்டது குறித்து மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது.
10% இடஒதுக்கீடு விவகாரம்: பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
Published on

புதுடெல்லி,

மருத்துவ மாணவர் சேர்க்கையில் பொருளாதார ரீதியில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு 10% இடஒதுக்கீடு வழங்கியதற்கு எதிராக மருத்துவ மாணவர்கள் சிலர் சுப்ரீம் கோர்ட்டில் பொதுநல மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான அமர்வு விசாரித்து வருகிறது.

இந்த வழக்கு தொடர்பாக இன்று நடைபெற்ற விசாரணையின் போது, இந்த இடஒதுக்கீட்டை அளிக்க வேண்டியதன் அவசியம் குறித்து மத்திய அரசு சார்பில் விரிவாக எடுத்துரைக்கப்பட்டது. அப்போது நீதிபதிகள் மத்திய அரசுக்கு சரமாரியாக கேள்விகளை எழுப்பினர். குறிப்பாக, பொருளாதார ரீதியில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கு 10% இடஒதுக்கீடு என்பது எவ்வாறு நிர்ணயிக்கப்பட்டது? எதன் அடிப்படையில் இந்த வரம்பு நிர்ணயம் செய்யப்பட்டது? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

மேலும், ஒவ்வொரு மாநிலத்திற்கும் பொருளாதார வரம்புகளில் வேறுபாடுகள் உள்ள நிலையில், எந்த ஆய்வின் அடிப்படையில் இந்த 10% இடஒதுக்கீடு வழங்க முடிவு செய்யப்பட்டது? அந்த ஆய்வில் யாரெல்லாம் இடம் பெற்றார்கள்? இது அரசின் கொள்கை ரீதியான முடிவாக இருந்தாலும், இந்த முடிவு எடுக்கப்பட்டதன் பின்னனியை நாங்கள் அறிய விரும்புகிறொம் என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.

இது தொடர்பான பதில்களை மத்திய அரசு ஒரு விரிவான பிரமாண பத்திரமாக தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிட்ட நீதிபதிகள், இந்த வழக்கின் விசாரணையை வரும் அக்டோபர் 3 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர். இதற்கிடையில் இந்த வழக்கில் தங்களையும் எதிர்மனுதாரர்களாக சேர்க்கக் கோரி தமிழக அரசும், திமுகவும் இடையீட்டு மனுக்களை தாக்கல் செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com