கர்நாடகத்தில் 100 தாலுகாக்களை வறட்சி பகுதிகளாக அறிவிக்க முடிவு

கர்நாடகத்தில் 100 தாலுகாக்களை வறட்சி பகுதியாக அறிவிக்க முடிவு செய்துள்ளதாக விவசாயத்துறை மந்திரி செலுவராயசாமி தெரிவித்துள்ளார்.
கர்நாடகத்தில் 100 தாலுகாக்களை வறட்சி பகுதிகளாக அறிவிக்க முடிவு
Published on

பெங்களூரு:

கர்நாடகத்தில் 100 தாலுகாக்களை வறட்சி பகுதியாக அறிவிக்க முடிவு செய்துள்ளதாக விவசாயத்துறை மந்திரி செலுவராயசாமி தெரிவித்துள்ளார்.

பெங்களூரு விதானசவுதாவில் நேற்று விவசாயத்துறை மந்திரி செலுவராயசாமி நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

மழைக்கு வாய்ப்பில்லை

கர்நாடகத்தில் இந்த ஆண்டு பருவமழை பொய்த்து விட்டது. மாநிலம் முழுவதும் 79 சதவீதம் அளவுக்கு விவசாய பணிகள் நடைபெற்று வருகிறது. குளங்களில் இருக்கும் தண்ணீர் மூலமாக பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்சப்பட்டு வருகிறது. குளத்து தண்ணீர் மூலமாக விவசாய பயிர்களை பாதுகாக்க முடியும். ஆனாலும் இந்த வாரத்திற்குள் மழை பெய்தால் பயிர்களை முழுமையாக காப்பாற்ற முடியும்.

தற்போது இருக்கும் சூழ்நிலையில் மழை வருவதற்கான வாய்ப்பே தெரியவில்லை. எனவே மாநிலத்தில் மழை பொய்த்து இருப்பதை அரசு தீவிரமாக எடுத்து கொண்டுள்ளது. இந்த விவகாரம் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினேன். வறட்சி பாதித்த தாலுகாக்கள் குறித்து ஆய்வு மேற்கொள்ளும்படியும் அறிவுறுத்தி உள்ளேன்.

செயற்கை மழை பெய்ய வைக்க...

தற்சமயம் வரை மாநிலத்தில் 100-க்கும் மேற்பட்ட தாலுகாக்களில் கடுமையான வறட்சி நிலவுவது தெரியவந்துள்ளது. 139 தாலுகாக்களில் வறட்சி இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதுபற்றி மத்திய அரசு தான் பரிசீலனை நடத்தி அறிவிக்க வேண்டும். ஒரு கிராமத்தில் 10 இடங்களுக்கு சென்று பார்க்க வேண்டும். இந்த மாத இறுதிக்குள் மத்திய அரசிடம் வறட்சி பாதித்த தாலுகாக்கள் குறித்த அறிக்கை அளிக்கப்படும். மழை பொய்த்து போய் விட்டதால், அந்த 100 தாலுகாக்களை முதற்கட்டமாக வறட்சி பாதித்ததாக அறிவிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

மாநிலத்தில் மழை பொய்த்து இருந்தாலும், செயற்கை மழை பெய்ய வைக்க அரசிடம் எந்த திட்டமும் இல்லை. ஏனெனில் இதற்கு முன்பு செயற்கை மழை பெய்ய வைக்க முயற்சிகள் நடந்தது. அதனால் எந்த பிரயோஜனமும் ஏற்படவில்லை.

இவவாறு அவர் கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com