சபரிமலை அய்யப்பன் கோவிலில் நாளை முதல் தினசரி 10 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி

விஷூ பண்டிகை மற்றும் சித்திரை மாத பூஜையை முன்னிட்டு சபரிமலை அய்யப்பன் கோவிலில் நாளை முதல் தினசரி 10 ஆயிரம் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
சபரிமலை அய்யப்பன் கோவிலில் நாளை முதல் தினசரி 10 ஆயிரம் பக்தர்களுக்கு அனுமதி
Published on

திருவனந்தபுரம்,

பங்குனி மாத பூஜை மற்றும் ஆராட்டு திருவிழாவையொட்டி சபரிமலை அய்யப்பன் கோவில் நடை கடந்த மார்ச் 14-ந் தேதி திறக்கப்பட்டது. 19-ந்தேதி பங்குனி ஆராட்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாட்கள் விழா மிக கோலாகலமாக நடந்து, 28-ந் தேதி ஆராட்டுடன் விழா நிறைவடைந்தது. அன்று இரவு நடை சாத்தப்பட்டது.

இந்த நிலையில், விஷூ பண்டிகை மற்றும் சித்திரை மாத பூஜைக்காக சபரிமலை அய்யப்பன் கோவில் நடை நாளை (சனிக்கிழமை) திறக்கப்படுகிறது. மாலை 5 மணிக்கு தந்திரி கண்டரரு ராஜீவரு முன்னிலையில் மேல்சாந்தி ஜெயராஜ் போற்றி நடையை திறந்து வைத்து தீபாராதனை நடத்துவார். அன்றைய தினம் பக்தர்களுக்கு அனுமதி இல்லை.

மறுநாள் (ஞாயிற்றுக்கிழமை) வழக்கம் போல் காலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு வழக்கமான பூஜைகளுடன் நெய்யபிஷேகம், உதயாஸ்தமன பூஜை, கலசாபிஷேகம், சகஸ்ர கலச பூஜை, படி பூஜை உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடைபெறும்.

14-ந்தேதி விஷூ பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பூஜைகளுடன் கனி காணுதல் நடைபெறும். அன்று பக்தர்களுக்கு கை நீட்டமாக நாணயங்களை தந்திரி, மேல்சாந்தி ஆகியோர் வழங்குவார்கள். தொடர்ந்து 18-ந்தேதி வரை சித்திரை மாத சிறப்பு பூஜைகள் நடைபெறும். அன்றைய தினம் இரவு 9 மணிக்கு நடை அடைக்கப்படும்.

கொரோனா பரவல் காரணமாக சபரிமலையில் கட்டுப்பாடுகள் நீட்டிக்கப்பட்டு உள்ளது. சபரிமலை வெர்சுவல் க்யூவில் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்த பக்தர்கள் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.

11-ந்தேதி முதல் 18-ந்தேதி வரை தினசரி 10 ஆயிரம் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள். அனைத்து பக்தர்களுக்கும் ஆர்.டி.பி.சி.ஆர். பாசோதனை கட்டாயமாக்கப்பட்டு உள்ளது. நெகட்டிவ் மருத்துவ பரிசோதனை சான்றிதழ்களுடன் வரும் பக்தர்கள் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். ரெயில்கள் மூலம் வரும் அய்யப்ப பக்தர்களின் வசதிக்காக கோட்டயம், திருவல்லா, செங்கன்னூர், கொல்லம், கொட்டாரக்கரை, புனலூர் ஆகிய இடங்களில் இருந்து கேரள அரசு போக்குவரத்து கழகத்தின் சிறப்பு பஸ்கள் நிலக்கல் வரை இயக்கப்படும். பத்தனம்திட்டையில் இருந்து பக்தர்களின் தேவைக்கு ஏற்றவாறு பஸ்களை இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com