10 டன் நிவாரணப் பொருட்கள்: வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள நேபாளத்திற்கு அனுப்பிவைத்த இந்தியா

100-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் மற்றும் ராணுவம் மற்றும் காவல் துறை அதிகாரிகளும் காணாமல் போயுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
10 டன் நிவாரணப் பொருட்கள்: வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள நேபாளத்திற்கு அனுப்பிவைத்த இந்தியா
Published on

புதுடெல்லி,

நேபாள-திபெத் எல்லையில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் கிராமங்கள் அடித்துச் செல்லப்பட்டு, சாலைகள் மற்றும் உள்கட்டமைப்புகள் சேதமடைந்ததைத் தொடர்ந்து, குறைந்தது 95 பேர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 600க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன.

பெருவெள்ளம்

நேபாளத்தின் தலைநகர் காத்மாண்டுவுக்கு வடக்கே உள்ள ரசுவாவில் இன்று (புதன்கிழமை) அதிகாலையில் இந்த பெருவெள்ளம் ஏற்பட்டது. நிலநடுக்கத்தை தொடர்ந்து ஏற்பட்ட பனிச்சரிவினால், உருகிய பனி போதே கோஷி ஆற்றில் பெருக்கெடுத்து ஓடியதே இதற்குக் காரணம் என்று முதற்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

எல்லையின் இருபுறமும் தேடுதல் பணிகள் நடைபெற்று வருவதாகவும், இதுவரை 88 பேர் மீட்கப்பட்டுள்ளதாகவும் நேபாள ராணுவம் தெரிவித்துள்ளது. திபெத்தைக் கட்டுப்படுத்தும் சீனாவின் அரசு ஊடகங்கள், குறிப்பிடத்தக்க உயிரிழப்புகள் ஏற்பட்டுள்ளதாக கூறுகின்றன. மேலும், இது "மிகப்பெரிய இழப்பை" ஏற்படுத்தும் என நேபாள அதிகாரிகள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

இந்தியர்கள் 105 பேர்

வழிகாட்டிகள் உட்பட 391 வெளிநாட்டு மற்றும் 93 நேபாள சுற்றுலாப் பயணிகளின் இருப்பிடத்தைக் கண்டறியும் பணிகள் நடைபெற்று வருவதாக நேபாள சுற்றுலா வாரியம் தெரிவித்துள்ளது. அப்பகுதியில் இருந்ததாக அறியப்பட்ட 100-க்கும் மேற்பட்ட அதிகாரிகள் மற்றும் ராணுவம் மற்றும் காவல் துறை அதிகாரிகளும் காணாமல் போயுள்ளனர். திபெத்தில் மூவர் உயிரிழந்துள்ளதாகவும், 265 பேர் காணாமல் போயுள்ளதாகவும் சீன அரசு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

காணாமல் போன சுற்றுலாப் பயணிகளில் இங்கிலாந்தைச் சேர்ந்த 12 பேரும், அமெரிக்கர்கள், மலேசியர்கள், தென் ஆப்பிரிக்கர்கள் மற்றும் இந்தியர்களும் 105 பேரும் அடங்குவர். தற்போது தேடுதல் மற்றும் மீட்புப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இந்நிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட நேபாளத்திற்கு 10 டன் நிவாரணப்பொருட்கள், அத்தியாவசிய மருந்துகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதளத்தில் கூறியிருப்பதாவது:-

நேபாளத்தில் ஏற்பட்ட பேரழிவு தரும் வெள்ளச் சூழலை எதிர்கொள்ள உதவும் வகையில், 10 டன் அளவிலான மனிதாபிமான மற்றும் பேரிடர் நிவாரண உதவிகள் (HADR) மற்றும் அத்தியாவசிய மருந்துகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

உயிரிழந்தவர்களின் குடும்பத்தினர் மற்றும் பாதிக்கப்பட்ட அனைவரும் எங்கள் சிந்தனைகளில் உள்ளனர். இந்தச் சவாலான சூழலில், இந்தியாவும் அதன் மக்களும் நேபாளத்துடனும் அந்நாட்டு மக்களுடனும் துணை நிற்கின்றனர்.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X

Daily Thanthi
www.dailythanthi.com