100 அடி நீளம்.. ரூ.1 கோடி மதிப்பு... திருமண விழாவில் கவனம் ஈர்த்த பண மாலை.!

திருமண விழாவில் ரூ.1 கோடி மதிப்பிலான பண மாலைகள் அணிவிக்கப்பட்ட சம்பவம் கவனம் ஈர்த்துள்ளது.
100 அடி நீளம்.. ரூ.1 கோடி மதிப்பு... திருமண விழாவில் கவனம் ஈர்த்த பண மாலை.!
Published on: 

லக்னோ,

உத்தரப்பிரதேசமாநிலம் மதுராவில் நடைபெற்ற திருமண விழாவில், 2 மணமகன்களுக்குத் தலா ரூ.1 கோடி மதிப்பிலான பண மாலைகள் அணிவிக்கப்பட்ட சம்பவம் கவனம் ஈர்த்துள்ளது.

பண மாலைகள்

உத்தரப் பிரதேச மாநிலம் மதுரா மாவட்டம், நாக்லா பாண்டா கிராமத்தைச் சேர்ந்த விவசாயி யோகேந் திரசிங் மற்றும் அவரது தம்பி குஷாபால்சிங் ஆகியோரின் மகன்களான பிரசாந்த், கன்ஹா ராகவ் ஆகியோருக்கு, முத்செராஸ் கிராமத்தைச் சேர்ந்த பெண்களுடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது. கடந்த நவம்பர் 21-ஆம் தேதி நடைபெற்ற திருமண ஊர்வலத்தின்போது, மணமகன்கள் பிரசாந்த் மற்றும் கன்ஹா ராகவ் ஆகியோர் குதிரைகளில் மணமகள்களின் கிராமத்திற்கு ஊர்வலமாகச் சென்றனர்.

100 அடி நீளம்

அந்த நேரத்தில், மணமக்களின்மைத்துனரும் ராஜஸ்தானின் நந்தோலா கிராமத் தலைவருமான யோகேஷ் குமார், இரு மணமகன்களுக்கும் தலா ரூ.1 கோடி வீதம் மொத்தம் ரூ. 2 கோடி மதிப்பிலான பணமாலைகளைஅணிவித்தார். ரூ.500 நோட்டுக் கட்டுகளால் உருவாக்கப்பட்ட இந்தப் பணமாலைகள் 100 அடி நீளம் வரை இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. வீட்டின் மாடியில் மணமகன்கள் நின்றிருக்க, பண மாலைகள் தெரு வரை நீண்டு சென்ற காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

இதுகுறித்து நாக்லா பாண்டா கிராம மக்கள் கூறுகையில், தங்கள் சமுதாயத்தில் மணமகனுக்குப் பணமாலை அணிவிப்பது வழக்கமான ஒன்றுதான் எனத் தெரிவித்துள்ளனர். மணமக்கள் பண மாலை அணிந்தவாறு சிறிது தூரம் குதிரைகளில் ஊர்வலமாகச் சென்றதாகவும், அவர்களுக்குப் பின்னால் சென்ற உறவினர்கள் அந்தப் பணமாலைகளைச் சுமந்து சென்றதாகவும் கிராம மக்கள் கூறியுள்ளனர். இந்தக் காட்சிகளைக் கிராமத்தைச் சேர்ந்த சிலர் காணொளியாகப் பதிவு செய்து சமூக வலைதளங்களில் வெளியிட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

X