பிரதமர் பேரணி எதிரொலியாக ராஜஸ்தான் மக்களுக்கு 100 யூனிட் இலவச மின்சாரம்; மத்திய மந்திரி ஷெகாவத் பேச்சு

பிரதமர் மோடி பேரணி எதிரொலியாக ராஜஸ்தான் மக்களுக்கு 100 யூனிட் இலவச மின்சார அறிவிப்பை வெளியிடும் நெருக்கடி ஏற்பட்டு உள்ளது என மத்திய மந்திரி ஷெகாவத் பேசியுள்ளார்.
பிரதமர் பேரணி எதிரொலியாக ராஜஸ்தான் மக்களுக்கு 100 யூனிட் இலவச மின்சாரம்; மத்திய மந்திரி ஷெகாவத் பேச்சு
Published on

புதுடெல்லி,

ராஜஸ்தானில் முதல்-மந்திரி அசோக் கெலாட் தலைமையிலான காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்து வருகிறது. இந்த நிலையில், ஒவ்வொரு மாதமும் 100 யூனிட் வரை பயன்படுத்தும் மின்சாரம் இலவசம் என அவர் நேற்றிரவு அதிரடி அறிவிப்பை வெளியிட்டு மக்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்.

இதுபற்றி மத்திய மந்திரி கஜேந்திர சிங் ஷெகாவத் இன்று கூறும்போது, பிரதமர் மோடியின் பேரணி மற்றும் பேச்சு ஆகியவற்றால், அசோக் கெலாட் தனது பழைய அறிவிப்புகளில் ஒன்றை புதிய வடிவில் மீண்டும் அறிவிக்க வேண்டிய கட்டாயத்திற்கு நேற்று ஆளானார்.

இந்த அறிவிப்பை அவர், பட்ஜெட் கூட்டத்தொடரின்போது வெளிப்படுத்தினார். அவருக்கு இரவில் திடீரென்று பிரம்ம ஞானம் வந்து விட்டதா?

அவருக்கு இந்த யோசனையானது, மஹங்காயி ரகத் முகாமின்போது தோன்றியது என அவரே ஒப்பு கொண்டு உள்ளார் என்று ஷெகாவத் கூறியுள்ளார்.

ராஜஸ்தானில் முதல் 100 யூனிட் வரை பயன்படுத்தும் மின்சாரம் இலவசம் என்ற அறிவிப்பால், மக்கள், அந்த மின்சார பயன்பாட்டிற்கான கட்டணம் செலுத்த வேண்டிய தேவையில்லை. 100 யூனிட்டுக்கு கூடுதலாக பயன்படுத்த கூடிய மின்சாரத்தில் முதல் 100 யூனிட்டுக்கான கட்டணம் செலுத்த வேண்டியதில்லை.

இதேபோன்று, 200 யூனிட் மின்சாரம் பயன்படுத்தும் நுகர்வோருக்கு, முதல் 100 யூனிட் மின்சாரம் இலவசம் என்பதுடன், நிலையான கட்டணம், பிற கட்டணங்கள் உள்ளிட்டவை 200 யூனிட் வரை தள்ளுபடி செய்யப்படும்.

அவர்களுக்கான மின் கட்டணத்தொகையை அரசே செலுத்தி விடும் என அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது. இதனை தனது டுவிட்டரில் கெலாட் நேற்றிரவு தெரிவித்து உள்ளார்.

ராஜஸ்தானில் இந்த ஆண்டு இறுதியில் மத்திய பிரதேசம் மற்றும் சத்தீஷ்காருடன் சேர்த்து தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், பிரதமர் மோடி ராஜஸ்தானில் நேற்று நடந்த பேரணி ஒன்றில் காங்கிரசுக்கு எதிராக கடுமையாக பேசினார். இந்த சூழலில், காங்கிரஸ் தலைமையிலான கெலாட் அரசின் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டு உள்ளது.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com