தர்மஸ்தலாவில் 100 பெண்கள் கொன்று புதைப்பு? - சிறப்பு புலனாய்வு குழு விரைவில் விசாரணை


தர்மஸ்தலாவில் 100 பெண்கள் கொன்று புதைப்பு? - சிறப்பு புலனாய்வு குழு விரைவில் விசாரணை
x

தர்மஸ்தலா சம்பவத்தில் உண்மையான குற்றவாளிகளை கைது செய்து தண்டிக்க வேண்டும் என்று பல்வேறு சமூக நல அமைப்புகள் கர்நாடக அரசை வலியுறுத்தி வருகின்றன.

பெங்களூரு,

கர்நாடக மாநிலம் தட்சிண கன்னடா மாவட்டம் பெல்தங்கடி தாலுகாவில் தர்மஸ்தலா உள்ளது. அங்கு புகழ் பெற்ற மஞ்சுநாதர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வருகை தருகிறார்கள். அரசியல் தலைவர்கள், மந்திரிகள், அதிகாரிகள் என உயர் பதவியில் உள்ளவர்களும் அங்கு வந்து சாமி தரிசனம் செய்கிறார்கள்.

இந்த நிலையில் அந்த கோவிலுக்கு சொந்தமான அருகில் உள்ள நிலத்தில் 100 பெண்கள், மாணவிகள் கற்பழித்து கொலை செய்யப்பட்டு, புதைக்கப்பட்டு உள்ளதாக பகீர் தகவல் வெளியாகி பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து அந்த கோவில் நிா்வாகத்தின் கீழ் பணியாற்றிய தூய்மை பணியாளர் ஒருவர் உரிய ஆதாரங்களுடன் கடந்த மாதம் (ஜூன்) 3-ந் தேதி கர்நாடக அரசுக்கு புகார் கடிதம் அனுப்பினார். மேலும் அவர் பெல்தங்கடி மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார்.

கடந்த 1998-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரையிலான இடைப்பட்ட காலத்தில் 100-க்கும் மேற்பட்ட பெண்கள், மாணவிகளை கொடூரமாக தாக்கி பாலியல் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டதாக பகீர் தகவலை வெளியிட்டார். இது கர்நாடகத்தில் பெரும் அதிர்ச்சியையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்த சம்பவத்தில் தர்மஸ்தலா கோவில் நிர்வாகத்தினருக்கும் தொடர்பு இருப்பதாக சொல்லப்படுகிறது. இதுகுறித்து கடந்த 4-ந் தேதி பெல்தங்கடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை தொடங்கியுள்ளனர். இதுகுறித்து உரிய விசாரணை நடத்தி உண்மையான குற்றவாளிகளை கைது செய்து தண்டிக்க வேண்டும் என்று பல்வேறு சமூக நல அமைப்புகள் கர்நாடக அரசை வலியுறுத்தி வருகின்றன.

மேலும் 100 பெண்கள் பலாத்காரம் செய்து கொல்லப்பட்டதாக கூறப்படும் இந்த விவகாரத்தில் சிறப்பு புலனாய்வு குழு (எஸ்.ஐ.டி.) அமைத்து விசாரணை நடத்த வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள், வக்கீல்கள், சுப்ரீம் கோர்ட்டு ஓய்வு பெற்ற நீதிபதி கோபாலகவுடா ஆகியோர் கர்நாடக அரசை வலியுறுத்தினர். மேலும் வக்கீல்கள் குழுவினர் பெங்களூருவில் முதல்-மந்திரி சித்தராமையாவை நேரில் சந்தித்து தர்மஸ்தலா விவகாரத்தில் உரிய விசாரணை நடத்தவும், சிறப்பு புலனாய்வு குழு விசாரணைக்கு உத்தரவிடவும் கோரிக்கை விடுத்தனர்.

இதையடுத்து 100 பெண்கள் பலாத்காரம் செய்து கொன்று புதைக்கப்பட்டதாக கூறப்படும் தர்மஸ்தலா சம்பவம் குறித்து விசாரிக்க கர்நாடக அரசு சிறப்பு புலனாய்வு குழு (எஸ்.ஐ.டி.) அமைத்து விசாரணைக்கு நேற்று முன்தினமே உத்தரவிட்டுள்ளது. இந்த குழுவின் தலைவராக மூத்த ஐ.பி.எஸ். அதிகாரி பிரணவ் மொகந்தி நியமிக்கப்பட்டுள்ளார். குழுவில், கூடுதல் போலீஸ் கமிஷனர் (நியமனம்) அனுசேத், துணை போலீஸ் கமிஷனர் சவுமியா லதா (சி.ஏ.ஆர். தலைமையகம்), உள்நாட்டு பாதுகாப்பு பிரிவு போலீஸ் சூப்பிரண்டு ஜிதேந்திரகுமார் தயாமா ஆகியோர் இடம் பெற்றுள்ளனர்.

இந்த எஸ்.ஐ.டி. குழுவினர் விரைவில் தங்களின் விசாரணையை தொடங்க உள்ளனர். விசாரணை தொடங்கியதும் பல்வேறு அதிர்ச்சியூட்டும் பரபரப்பு தகவல்கள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தர்மஸ்தலா போலீஸ் நிலையத்தில் பதிவு செய்யப்பட்ட வழக்கு, தர்மஸ்தலா சென்று பெண்கள், மாணவியர் காணாமல் போனதாக மாநிலத்தின் பிற மாவட்டங்களில் பதிவு செய்யப்பட்ட வழக்குகள், இனி பதிவு செய்யப்பட உள்ள வழக்குகளையும் சிறப்பு புலனாய்வு குழு விசாரிக்கும் என்று கூறப்படுகிறது.

1 More update

Next Story