வன்னியர்களுக்கான 10.5% உள் இடஒதுக்கீடு ரத்து செல்லும் - சுப்ரீம் கோர்ட்டு

தமிழகத்தில் வன்னியர்களுக்கான 10.5% உள்ஒதுக்கீடு சட்டத்தை ரத்து செய்த சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு செல்லும் என சுப்ரீம் கோர்ட்டு தெரிவித்துள்ளது.
வன்னியர்களுக்கான 10.5% உள் இடஒதுக்கீடு ரத்து செல்லும் - சுப்ரீம் கோர்ட்டு
Published on

புதுடெல்லி,

வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள்ஒதுக்கீடு சட்டத்தை ரத்து செய்த சென்னை ஐகோர்ட்டின் கடந்த ஆண்டு நவம்பர் 1-ந் தேதி தீர்ப்புக்கு தடை விதிக்க கோரி தமிழக அரசின் தலைமைச் செயலாளர், தமிழ்நாடு பிற்படுத்தப்பட்டோர் ஆணையம், தமிழக சட்டத்துறை, தமிழ்நாடு உயர்கல்வித் துறை சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

அதேபோல பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ், அக்கட்சியின் தலைவர் ஜி.கே.மணி, சமூகநீதி பேரவையின் தலைவர் வக்கீல் கே.பாலு உள்ளிட்டோர் சார்பிலும் மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மேல்முறையீட்டு மனுக்கள் மீதான இறுதி விசாரணையை நீதிபதி எல்.நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வு 4 நாட்களாக நடத்தி, தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் கடந்த பிப்ரவரி 23-ந் தேதி தள்ளிவைத்தது.

இந்நிலையில், வன்னியர் இடஒதுக்கீடு ரத்து தொடர்பான தமிழக அரசின் மேல்முறையீடு மனுவை விசாரித்த நீதிபதிகள் நாகேஸ்வராவ், பி.ஆர்.கவாய் அமர்வு தீர்ப்பு வழங்கி உள்ளது.

அதில், வன்னியர்களுக்கான 10.5% உள்ஒதுக்கீடு சட்டத்தை ரத்து செய்த சென்னை ஐகோர்ட்டு தீர்ப்பு செல்லும். உள் இட ஒதுக்கீடு வழங்கும் போது அதற்கான சரியான நியாயமான காரணங்களை அரசு தெளிவுபடுத்த வேண்டும். உள் ஒதுக்கீடு வழங்க மாநில அரசுக்கு அதிகாரமிருந்தாலும் சரியான காரணங்களை கூற வேண்டும்.

கல்வி, வேலை வாய்ப்பில் வன்னியர்களுக்கு 10.5 இட ஒதுக்கீடு வழங்கும் தமிழக அரசின் அரசாணை ரத்து செய்யப்படுகிறது. சென்னை ஐகோர்ட்டின் தீர்ப்பை உறுதி செய்து தமிழக அரசின் மேல்முறையீடு மனுவை தள்ளுபடி செய்யப்படுகிறது.

Related Stories

No stories found.
X

Daily Thanthi
www.dailythanthi.com