அசாமில் வெள்ளத்தில் சிக்கி 105 பேர் பலி

அசாமில் தொடர் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கி 105 பேர் பலியாகி உள்ளனர்.
அசாமில் வெள்ளத்தில் சிக்கி 105 பேர் பலி
Published on

கவுகாத்தி,

அசாமில் தொடர்ச்சியாக பெய்து வரும் கனமழையால் பிரம்மபுத்திரா உள்ளிட்ட பல்வேறு ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் அசாமிலுள்ள 26 மாவட்டங்களில் உள்ள மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு கடுமையான பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.

இதுபற்றி அசாம் மாநில பேரிடர் மேலாண் கழகம் வெளியிட்டுள்ள செய்தியில், அசாமில் வெள்ள நீரானது வீடுகள், கட்டிடங்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளை சூழ்ந்துள்ளது. இதேபோன்று பயிர்கள், சாலைகள் மற்றும் பாலங்களும் நீரால் சூழப்பட்டு உள்ளன. இதனால், மக்கள் தங்களது இருப்பிடங்களை விட்டு தஞ்சம் தேடி வேறு பகுதிகளுக்கு புலம் பெயர்ந்துள்ளனர்.

இதேபோன்று, வெள்ளம் பாதித்த காசிரங்கா தேசிய பூங்காவில் 90 விலங்குகள் பலியாகி உள்ளன என தெரிவித்து உள்ளது. வெள்ளம் பாதித்த பகுதிகளில் நிவாரண பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அசாமில் வெள்ள பாதிப்புக்கு இதுவரை 105 பேர் பலியாகி உள்ளனர். 27.64 லட்சம் மக்கள் பாதிப்படைந்து உள்ளனர். அவர்களை பாதுகாப்பான இடத்தில் தங்க வைக்கும் பணிகள் நடந்து வருகின்றன.

இதற்காக 649 நிவாரண முகாம்கள் மற்றும் உணவு உள்ளிட்ட பொருட்களுக்கான வினியோக மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. அவற்றில் தங்கியுள்ளவர்களுக்கு தேவையான அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்கள் வழங்கப்பட்டு உள்ளன. இதேபோன்று கால்நடைகளுக்கான தீவனங்களும் வழங்கப்படுகின்றன.

கடந்த 24 மணிநேரத்தில் வெள்ளத்தில் இருந்து 511 பேர் மீட்கப்பட்டு உள்ளனர். தொடர்ந்து மீட்பு மற்றும் நிவாரண பணிகள் நடந்து வருகின்றன.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com