

லத்தூர்,
நாட்டில் மராட்டியம் நாள்தோறும் அதிக அளவில் கொரோனா பாதிப்புகளை சந்தித்து வருகின்றன. நேற்றுடன் முடிவடைந்த கடந்த 24 மணிநேரத்தில் மராட்டியத்தில் 900 பேர் கொரோனாவால் உயிரிழந்து உள்ளனர்.
இது ஒரு நாளில் மிக அதிக எண்ணிக்கையாகும். இந்நிலையில், கோடையில் அதிக வறட்சியை சந்திக்க கூடிய மராட்யத்தின் லத்தூர் மாவட்டத்தில் வசித்து வருபவர் தேனு உமாஜி சவான் (வயது 105).
இவரது மனைவி மோதாபாய் தேனு சவான் (வயது 95). இந்த தம்பதி கடந்த மார்ச் 25ந்தேதி கொரோனா சிகிச்சைக்காக லத்தூரில் உள்ள விலாஸ்ராவ் தேஷ்முக் மருத்துவ அறிவியல் மையத்தில் சேர்க்கப்பட்டனர்.
இதுபற்றி டாக்டர் சுதீர் தேஷ்முக் கூறும்பொழுது, அவர்களுக்கு காய்ச்சல் மற்றும் சுவாச கோளாறுகள் இருந்தன. அவர்களுடைய குழந்தைகள் அவர்களை சிகிச்சைக்காக சேர்த்தனர். அவர்களை பரிசோதனை செய்து, ஆக்சிஜன் அளிக்கப்பட்டது.
ஆன்டிவைரல் டோஸ்களும் கொடுக்கப்பட்டன என கூறியுள்ளார். தொடர்ந்து 10 நாட்கள் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து கொண்ட அவர்கள் இருவரும் குணமடைந்து கடந்த 4ந்தேதி திரும்பி சென்றனர். அவர்களுடைய அனைத்து மருத்துவ பரிசோதனைகளும் திருப்தியளிக்கும் வகையில் இருந்தன என கூறியுள்ளார்.
நாட்டில் சிறுவர் முதல் பெரியவர் வரை வயது வேற்றுமையின்றி அனைத்து தரப்பினருக்கும் கொரோனா பாதிப்புகள் தீவிர அச்சுறுத்தலாக இருந்து வரும் சூழலில், 100 வயதினை எட்டிய இதுபோன்ற முதியவர்கள் குணமடைந்து திரும்புவது மக்களிடையே நம்பிக்கை ஏற்படுத்துகிறது.