ஆயுதப்படைகளில் 1.09 லட்சம் காலியிடங்கள் - மத்திய அரசு தகவல்

ஆயுதப்படைகளில் 1.09 லட்சம் காலியிடங்கள் உள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
புதுடெல்லி,
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் கடந்த 21-ந்தேதி தொடங்கியது. இதில் ஆபரேஷன் சிந்தூர், பீகார் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் போன்ற பிரச்சினைகள் பெரும் புயலை கிளப்பி வருகின்றன. இந்த பிரச்சினைகள் குறித்து விவாதிக்க வலியுறுத்தி எதிர்க்கட்சிகள் போர்க்கொடி தூக்கி வருவதால் 3-வது நாளாக இரு அவைகளும் முடங்கின.
இதற்கிடையில், மத்திய ஆயுதப்படைகள் மற்றும் அசாம் ரைபிள் படைகளில் உள்ள காலியிடங்கள் தொடர்பான கேள்விகளுக்கு மத்திய உள்துறை இணை மந்திரி நித்யானந்த் ராய் மாநிலங்களவையில் பதிலளித்தார்.
அதன்படி, 'துணை ராணுவப்படைகளில் வீரர்களின் எண்ணிக்கை கடந்த 2021-ம் ஆண்டில் இருந்த 10,04,980-ல் இருந்து 2025 ஜனவரி 1 நிலவரப்படி 10,67,110 ஆக அதிகரிக்கப்பட்டு உள்ளது. இதில் ஜனவரி 1-ந்தேதி நிலவரப்படி 1,09,868 காலியிடங்கள் உள்ளன. இதில் 72,689 இடங்களுக்கு ஆட்சேர்ப்பு பணிகள் நடந்து வருகிறது' என தெரிவித்தார்.






