

இம்பால்,
நாடு முழுவதும் கொரோனா பரவல் காரணமாக பள்ளி, கல்லூரிகள் அனைத்திற்கும் விடுமுறை அளிக்கப்பட்டு மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் வகுப்புகளும், தேர்வுகளும் நடத்தப்பட்டு வருகின்றன. தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. சி.பி.எஸ்.சி. பள்ளிகளிலும் 12 ஆம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்பட்டுள்ளது.
அந்த வகையில் மணிப்பூர் மாநில அரசு பள்ளிகளில் இந்த ஆண்டு 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக அம்மாநில பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. மணிப்பூரில் கடந்த மே மாதம் நடைபெற இருந்த 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வுகள் ஏற்கனவே ஒத்திவைக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் தற்போதைய கொரோனா சூழல் காரணமாக மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு 10 மற்றும் 12-ம் வகுப்பு தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக மணிப்பூர் மாநில பள்ளிக்கல்வித்துறை இன்று அறிவித்துள்ளது. மேலும் அடுத்த அறிவிப்பு வரும் வரை, மாநிலம் முழுவதும் உள்ள கல்வி நிலையங்கள், பயிற்சி வகுப்புகள், மாணவர்களின் தங்கும் விடுதிகள் அனைத்தையும் மூடுவதற்கு மணிப்பூர் அரசு உத்தரவிட்டுள்ளது.