வளைகுடா நாடுகளில் 10-ம் வகுப்பு சி.பி.எஸ்.இ. தேர்வுகள் ரத்து
புதுடெல்லி
ஈரான் நாட்டை அமெரிக்காவும், இஸ்ரேலும் கூட்டாக இணைந்து வான்வழியாக கடந்த பிப்ரவரி 28-ந்தேதி கடுமையாக தாக்கின. இதில் 180-க்கும் மேற்பட்ட மாணவிகள் உள்பட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.
ஈரானின் பாதுகாப்பு மந்திரி அமீர் நசீர்ஜடே மற்றும் புரட்சிகர காவல்படை தளபதி முகமது பாக்பூர் ஆகியோர் கொல்லப்பட்டனர். ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனி, அவருடைய மனைவி, மகள், மருமகன் உள்ளிட்ட குடும்பத்தினரும் கொல்லப்பட்டு உள்ளனர். இதனை ஈரான் நாடும் உறுதி செய்துள்ளது. இதனால் மத்திய கிழக்கு பகுதியில் கடும் பதற்றம் காணப்படுகிறது.
இந்த மோதலை அடுத்து மத்திய கிழக்கு பகுதிகளில் மார்ச் 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் நடக்க இருந்த 10, 12 ஆகிய வகுப்புகளுக்கான சி.பி.எஸ்.இ. தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டு உள்ளன என முன்பு அறிவிப்பு வெளியானது. இதுபற்றி சி.பி.எஸ்.இ. தேர்வுகளுக்கான கட்டுப்பாட்டாளர் சான்யாம் பரத்வாஜ் கூறும்போது, மத்திய கிழக்கின் பஹ்ரைன், ஈரான், குவைத், ஓமன், கத்தார், சவுதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் உள்ளிட்ட நாடுகளில் தற்போது காணப்படும் சூழலால், மார்ச் 5 மற்றும் மார்ச் 6 ஆகிய தேதிகளில் நடைபெற இருந்த 10, 12 ஆகிய வகுப்புகளுக்கான தேர்வுகள் ஒத்திவைக்கப்படுகின்றன என கூறினார்.
புதிய தேதிகள் பின்னர் அறிவிக்கப்படும் என கூறினார். அவர், மார்ச் 5-ந்தேதி நிலைமையை பற்றி மறுஆய்வு செய்வோம் என்றும் கூறினார். இந்நிலையில், மார்ச் 7 முதல் 11 வரையிலான நாட்களில் நடக்க இருந்த 10-ம் வகுப்புகளுக்கான சி.பி.எஸ்.இ. தேர்வுகள் ரத்து செய்யப்பட்டு உள்ளன. இதேபோன்று மார்ச் 3, மார்ச் 5 மற்றும் மார்ச் 6 ஆகிய தேதிகளில் நடைபெற இருந்த தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டு உள்ளன.
இதனால் ஒட்டு மொத்தத்தில் வளைகுடா நாடுகளில் நடக்க இருந்த 10-ம் வகுப்புகளுக்கான தேர்வுகள் ரத்து செய்யப்படுகின்றன. அதன் முடிவுகள் பின்னர் அறிவிக்கப்படும் என அறிவிப்பு வெளியானது. 12-ம் வகுப்புக்கு 7-ந்தேதி நடக்க இருந்த தேர்வு ஒத்திவைக்கப்படுகிறது. 7-ந்தேதி நிலைமையை பற்றி மறுஆய்வு செய்யப்படும். 9-ந்தேதி முதல் நடக்க உள்ள தேர்வு பற்றி அறிவுறுத்தல்கள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

