பஸ் மீது லாரி மோதி பயங்கர விபத்து - 11 பேர் உயிரிழப்பு, 10 பேர் காயம்

உத்தரப் பிரதேசத்தில் கல் ஏற்றிக் கொண்டு வந்த டிப்பர் லாரி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து பஸ்சின் மீது மோதி, பஸ் மீது கவிழ்ந்தது.
பஸ் மீது லாரி மோதி பயங்கர விபத்து - 11 பேர் உயிரிழப்பு, 10 பேர் காயம்
Published on

பரேலி,

உத்தரப் பிரதேச மாநிலம் ஷாஜஹான்பூரில் பஸ் மீது லாரி மோதி ஏற்பட்ட பயங்கர விபத்தில் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். முன்னதாக சீதாபூர் மாவட்டத்தில் இருந்து நேற்று சுமார் 45 பயணிகளை ஏற்றிக்கொண்டு பஸ் ஒன்று உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள பூர்ணகிரி கோவிலிக்குச் சென்று கொண்டிருந்தது. இந்த நிலையில் செல்லும் வழியில் இரவு உணவுக்காக குதர் பகுதியில் கோலா மாநில நெடுஞ்சாலையில் உள்ள தாபா ஒன்றுக்கு அருகில் பஸ் நிறுத்தப்பட்டிருந்தது.

பஸ்சில் இருந்த பாதி பயணிகள் இரவு உணவு சாப்பிடுவதற்காக இறங்கி சென்ற நிலையில், மீதமிருந்தவர்கள் அப்படியே பஸ்சில் இருந்தனர். இந்த நிலையில் இரவு 11.10 மணியளவில் கல் ஏற்றிக் கொண்டு வந்த டிப்பர் லாரி ஒன்று கட்டுப்பாட்டை இழந்து பஸ்சின் மீது மோதி, பஸ் மீது கவிழ்ந்தது. இதையடுத்து பஸ்சில் இருந்தவர்களின் அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடிவந்து அவர்களை மீட்க முயன்றனர். ஆனால் லாரியை அகற்ற முடியவில்லை.

உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் கிரேன்களின் உதவியுடன் விபத்தில் சிக்கியவர்களை மீட்டனர். சுமார் 3 மணி நேரத்திற்கும் மேலாக மீட்பு பணிகள் நடைபெற்றன. இந்த விபத்தில் 11 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 10 பேர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com