

விதிஷா,
மத்திய பிரதேச மாநிலம் விதிஷா மாவட்டத்தில் கஞ்ச் பசோடா பகுதியில் லால் பதர் கிராமத்தில் 50 அடி ஆழம் கொண்ட கிணறு ஒன்றில் கடந்த வியாழ கிழமை இரவு 9 மணியளவில் சிறுமி தவறி விழுந்து விட்டாள். இதுபற்றி அறிந்த கிராம மக்கள் சிறுமியை மீட்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அந்த கிணற்றில் 20 அடிக்கு தண்ணீர் இருந்ததாக கூறப்படுகிறது. கிணற்றுக்குள் இறங்கி சிலர் சிறுமியை மீட்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர். கிராம மக்கள் கிணற்றின் சுற்றுச்சுவர் அருகே நின்று மீட்பு பணிகளை வேடிக்கை பார்த்து கொண்டிருந்தனர்.
அப்போது திடீரென கிணற்றின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்து, அங்கு நின்றிருந்த சுமார் 30க்கும் மேற்பட்டவர்கள் கிணற்றுக்குள் தவறி விழுந்தனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக மாநில மற்றும் தேசிய பேரிடர் மீட்பு குழுவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
அவர்கள் சம்பவ இடத்தில் மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். முதல் கட்டமாக 2 பேர் பலியானதாக தகவல் வெளியானது. இந்நிலையில், கிணற்றில் இருந்து 19 பேர் காயங்களுடன் மீட்கப்பட்டனர். 11 பேர் மூச்சு திணறி பலியாகினர். இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணி தொடர்ந்து வருகிறது.
இந்த சம்பவத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என முதல்-மந்திரி சிவராஜ் சிங் சவுகான் அறிவித்துள்ளார். மேலும், காயம் அடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் வழங்கப்படும் எனவும், அவர்களுக்கு உரிய சிகிச்சை அளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது என கூறியுள்ளார்.
இதேபோன்று, இந்த சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்த பிரதமர் மோடி, உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கவும் உத்தரவிட்டு உள்ளார்.