11 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு: சபாநாயகர் என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறார்? - தமிழக அரசு பதில் அளிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு

ஓ.பன்னீர்செல்வம் உள்பட 11 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கில் சபாநாயகர் என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறார் என்று தமிழக அரசு பதில் அளிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டது.
11 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு: சபாநாயகர் என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறார்? - தமிழக அரசு பதில் அளிக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
Published on

புதுடெல்லி,

தமிழக சட்டசபையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொண்டு வந்த நம்பிக்கை தீர்மானத்தின்மீது 2017-ம் ஆண்டு, பிப்ரவரி மாதம் 18-ந் தேதி ஓட்டெடுப்பு நடந்தது. இதில், தற்போதைய துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் உள்பட 11 எம்.எல்.ஏ.க்கள் நம்பிக்கை தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்தனர். அவர்களை தகுதி நீக்கம் செய்யுமாறு சபாநாயகர் பி.தனபாலிடம் தி.மு.க. மனு அளித்தது. அதன்மீது எந்த நடவடிக்கையும் இல்லை.

இதன்காரணமாக தி.மு.க. மற்றும் வெற்றிவேல், தங்கதமிழ்செல்வன் ஆகியோர் சார்பில் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அதை விசாரித்த ஐகோர்ட்டு, இந்த விவகாரத்தில் கோர்ட்டு தலையிட முடியாது; சபாநாயகர் முடிவே இறுதியானது என்று கூறி வழக்கை தள்ளுபடி செய்து 2018-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் உத்தரவிட்டது. இதை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் அவர்கள் மேல்முறையீடு செய்தனர்.

இந்த வழக்கு நீண்ட காலம் நிலுவையில் இருந்து வந்த நிலையில், இதேபோன்று மணிப்பூர் மாநில சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு, பா.ஜனதாவுக்கு தாவி மந்திரி பதவி பெற்ற சியாம்குமாரை சபாநாயகர் தகுதிநீக்கம் செய்யாததை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் முறையிட்டு, அந்த வழக்கில் கடந்த 21-ந் தேதி தீர்ப்பு வந்தது.

அதில் வழக்குதாரர்கள் மணிப்பூர் சபாநாயகரை மீண்டும் நாட வேண்டும், அவர் 4 வாரங்களில் முடிவு எடுக்காவிட்டால் மீண்டும் சுப்ரீம் கோர்ட்டை நாடலாம் என நீதிபதிகள் ரோகிண்டன் பாலிநாரிமன் அமர்வு தீர்ப்பில் கூறினர்.

இந்த தீர்ப்பை அடிப்படையாக கொண்டு, தமிழகத்தில் ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்கள் தகுதிநீக்க வழக்கை அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று தி.மு.க. சார்பில் மூத்த வக்கீல் கபில்சிபல் கடந்த 24-ந் தேதி தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே அமர்வில் முறையிட்டார். அதை சுப்ரீம் கோர்ட்டு ஏற்றது.

அதன் அடிப்படையில் 11 எம்.எல்.ஏ.க்கள் தகுதி நீக்க வழக்கு, சுப்ரீம் கோர்ட்டில் தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே, நீதிபதிகள் பி.ஆர்.கவாய், சூரியகாந்த் ஆகியோர் அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது.

சபாநாயகர் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் முகுல் ரோத்தகி, சட்டசபையில் முதல்-அமைச்சர் கொண்டு வந்த நம்பிக்கை தீர்மானத்துக்கு எதிராக வாக்களித்த ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்களை தகுதிநீக்கம் செய்யக்கோரி வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. கொறடா உத்தரவு மீறப்பட்டுள்ளது. சபாநாயகர் 3 வருடங்களாக நடவடிக்கை எதுவும் எடுக்காததால் இந்த விஷயத்தில் முடிவு எடுக்க வேண்டும் என்று சபாநாயகருக்கு உத்தரவிட வேண்டும் என்று மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. இதுவே இந்த வழக்கின் சாராம்சம். சபாநாயகருக்கு கோர்ட்டு எப்படி உத்தரவு பிறப்பிக்க முடியும்? என கேள்வி எழுப்பினார்.

தி.மு.க. கொறடா ஆர்.சக்கரபாணி தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் கபில்சிபல், நம்பிக்கை வாக்கெடுப்புக்கு எதிராக வாக்களித்த ஓ.பன்னீர்செல்வம் உள்ளிட்ட 11 எம்.எல்.ஏ.க்களை தகுதி நீக்கம் செய்யவேண்டும் என்று 2017-ல் சபாநாயகருக்கு நோட்டீஸ் அளித்தோம். 3 ஆண்டுகள் ஆகியும் அவர் எந்த முடிவும் எடுக்கவில்லை. சட்டசபையின் பதவிக்காலமான 5 ஆண்டுகள் முடிந்து விட்டால் தகுதிநீக்க நோட்டீஸ் காலாவதியாகிவிடும். எனவேதான் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோருகிறோம். அரசுக்கு எதிராக இவர்கள் வாக்களித்தது இந்த வழக்கின் ஆதாரமாக உள்ளது. ஒரு குறிப்பிட்ட விவகாரத்தின்மீது குறிப்பிட்ட கால நேரத்துக்குள் சபாநாயகர் முடிவு எடுக்க வேண்டும் என்று சமீபத்தில் மணிப்பூர் சட்டசபை சபாநாயகருக்கு சுப்ரீம் கோர்ட்டு நீதிபதி ரோகிண்டன் பாலி நாரிமன் அமர்வு உத்தரவு பிறப்பித்து உள்ளது. ஆனால் இங்கு 3 வருடங்கள் ஆகியும் சபாநாயகர் முடிவு எடுக்காமல் இருக்கிறார். எனவே மேற்கண்ட சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பின் பின்னணியில் இந்த வழக்கை ஒப்பிட்டு பார்க்க வேண்டும் என வாதாடினார்.

அதையடுத்து சட்டசபை செயலாளர் தரப்பில் ஆஜரான தமிழக அரசு அட்வகேட் ஜெனரல் விஜய் நாராயணிடம் தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே, சபாநாயகருக்கு எப்போது நோட்டீஸ் அளிக்கப்பட்டது? அந்த நோட்டீஸ் மீது எப்போது நடவடிக்கை எடுக்கப்போகிறீர்கள்? இந்த விவகாரத்தில் என்ன செய்யப்போகிறீர்கள்? ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்போகிறீர்களா? என கேள்விகளை எழுப்பினார்.

அதற்கு அவர், சட்டசபை செயலாளரிடம் கேட்டுத்தான் தெரிவிக்க வேண்டும் என பதில் அளித்தார்.

சபாநாயகர் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் முகுல் ரோத்தகி, சபாநாயகர் முடிவு தொடர்பான வழக்குகளை 3 நீதிபதிகள் அமர்வு விசாரிக்க முடியாது. 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமர்வுதான் முடிவு செய்ய முடியும் என கூறினார்.

அதற்கு தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே, எங்களுக்கு அந்த அதிகாரம் இல்லை என்று கூறுகிறீர்களா? அட்வகேட் ஜெனரல் உங்கள் வாதத்தை ஏற்றுக் கொள்கிறாரா? எங்களுக்கு தெரியவேண்டியது ஏன் நடவடிக்கை எடுக்காமல் காலதாமதம் செய்யப்பட்டுள்ளது என்பதுதான். ஏற்கனவே சபாநாயகருக்கு எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் அளித்த நோட்டீஸ் மீது நடவடிக்கை எடுக்காமல் இருப்பதற்கு நீங்கள் கூறும் காரணத்தை ஏற்க முடியாது. அதே வேளையில் சபாநாயகர் பதவி என்பது அரசியல் சட்டத்தின் அடிப்படையில் உயரிய பதவியாகும். அந்தப் பதவியின் அதிகாரத்தில் குறுக்கிட நாங்கள் விரும்பவில்லை. ஆனால் எதிர்க்கட்சிகள் அளித்த நோட்டீஸ் மீது சபாநாயகர் என்ன செய்யப்போகிறார் என்பது குறித்து அவருடைய கருத்துகளை கேட்டு அட்வகேட் ஜெனரல் எங்களுக்கு தெரிவிக்க வேண்டும் என்று கூறினார்.

அதையடுத்து அட்வகேட் ஜெனரல், 2 வாரம் அவகாசம் வேண்டும் என்று கேட்டார். தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே 2 வாரம் அவகாசம் அளித்து, வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை 14-ந் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com