

புதுடெல்லி,
காங்கிரஸ் எம்.பி.யும், நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவருமான ராகுல் காந்தி ‘எக்ஸ்’ தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது;-
“இனி போட்டித் தேர்வு எழுதவே வேண்டாம்... லகிம்பூர் கேரியைச் சேர்ந்த 21 வயதான ரித்திக் மிஸ்ராவின் கடைசி வார்த்தைகள் இவை. மூன்றாவது முறையாக நீட் தேர்வு எழுதிய இந்த மாணவர், தேர்வு ரத்து செய்யப்பட்ட செய்தி வந்தவுடன் மனமுடைந்து போனார்.
கோவாவிலும் நீட் தேர்வுக்கு தயாராகி வந்த மாணவர் உயிரை மாய்த்துக் கொண்டார். இந்த குழந்தைகள் தேர்வில் தோற்கவில்லை. ஊழல் நிறைந்த அமைப்பால் கொல்லப்பட்டுள்ளனர். இது தற்கொலை அல்ல. இது அமைப்பு செய்த கொலை.
புள்ளிவிவரங்களை பாருங்கள், 2015 முதல் 2026 வரை, 148 தேர்வுகளில் ஊழல், 87 தேர்வுகள் ரத்து, 9 கோடி மாணவர்களின் எதிர்காலம் பாதிப்பு. 148 ஊழல்களில் தண்டனை பெற்றது, ஒரே ஒருவர் மட்டும்.
17 வழக்குகளை சி.பி.ஐ. விசாரித்தது, 11 வழக்குகளை அமலாக்கத்துறை விசாரித்தது. ஆனால் யாருக்கும் தண்டனை இல்லை. நீட், AIPMT மற்றும் பிற மருத்துவ நுழைவுத் தேர்வுகளில் மட்டும் 15 ஊழல்கள்.
இதிலேயே மிக அவமானகரமான விஷயம் என்னவென்றால், இந்த ஊழல்களுக்கு பொறுப்பான எந்த அதிகாரியோ, அல்லது அமைச்சரோ ராஜினாமா செய்யவில்லை. பதவியிலிருந்து நீக்கப்பட்டவர்களையே பின்னர் அமைதியாக பெரிய பதவிகளில் மீண்டும் அமர்த்திவிடுகிறார்கள்.
திருட்டை முன்னின்று நடத்துவோருக்கு பரிசு கிடைக்கிறது. ஆனால் தேர்வு எழுதும் மாணவர்கள் உயிரை இழக்கிறார்கள். மோடி அவர்களே உங்கள் பொறுப்புணர்வை எழுப்ப இன்னும் எத்தனை ரித்திக்குகள் உயிரிழக்க வேண்டும்?
என் இளம் நண்பர்களே, உங்கள் வலி என் வலி. உங்கள் உழைப்பு என் உழைப்பு. உங்கள் எதிர்காலத்தை திருடுபவர்களிடம் பதில் கேட்கப்பட்டே ஆக வேண்டும். எவ்வளவு காலம் ஆனாலும் யாரும் தப்பிக்க முடியாது — இது என் வாக்குறுதி. இந்த போராட்டத்தை நாம் ஒன்றாக போராடுவோம், வெற்றியும் பெறுவோம்.”
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.