

புதுடெல்லி,
மத்திய அரசினால் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்ட அலோக் வர்மாவை உச்ச நீதிமன்றம் சிபிஐ இயக்குநராக மீண்டும் நியமித்தது. மேலும் தேர்வுக் குழு அலோக் வர்மா குறித்த முடிவை எடுத்துக் கொள்ளட்டும் என்று உச்ச நீதிமன்றம் அறிவித்தது.
77 நாட்கள் கட்டாய விடுப்பில் இருந்த அலோக் வர்மா உச்ச நீதிமன்ற உத்தரவின் பேரில் சிபிஐ அலுவலகம் வந்தார். அடுத்த நாளே (ஜனவரி 10) பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான உயர்மட்டக் குழு நடத்திய சுமார் 2 மணி நேரக் கூட்டத்துக்குப் பிறகு அலோக் வர்மா நீக்கப்பட்டார்.
இதையடுத்து, சிபிஐ இடைக்கால இயக்குநராக நாகேஷ்வரராவ் நியமனம் செய்யப்பட்டார். இந்த நிலையில், சிபிஐக்கு புதிய இயக்குநரை நியமனம் செய்வது தொடர்பாக பிரதமர் மோடி தலைமையில் மூன்று நபர் கொண்ட தேர்வுக்குழு இன்று கூடி ஆலோசிக்க உள்ளது.
சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், லோக்சபா காங்கிரஸ் குழுத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே ஆகியோர் கொண்ட இக்குழு பதவி நீக்கம் செய்யப்பட்ட அலோக்வர்மாவுக்கு பதிலாக புதிய சிபிஐ இயக்குனரை தேர்வு செய்ய உள்ளது. மொத்தம் 12 பேர்களின் பெயர்கள் பரிந்துரையில் உள்ளதாகவும், 1982-85 பேட்சுகளை சேர்ந்த ஐபிஎஸ் அதிகாரிகள் பலரின் பெயர்கள் இந்த பட்டியலில் இடம்பெற்றள்ளதாகவும் பிரதமர் அலுவலக தகவல்கள் தெரிவிக்கின்றன.