குஜராத் தொங்கு பாலம் விபத்து: பாஜக எம்.பி.யின் குடும்பத்தை சேர்ந்த 12 பேர் உயிரிழந்த சோகம்!

பாஜகவை சேர்ந்த எம்.பி மோகன்பாய் குடும்பத்தைச் சேர்ந்த 12 பேர் உயிரிழந்தனர்.
குஜராத் தொங்கு பாலம் விபத்து: பாஜக எம்.பி.யின் குடும்பத்தை சேர்ந்த 12 பேர் உயிரிழந்த சோகம்!
Published on

ஆமதாபாத்,

குஜராத் மாநிலம் மோர்பி கேபிள் பாலம் இடிந்து விழுந்ததில் ராஜ்கோட் பாஜக எம்.பி.யின் குடும்பத்தைச் சேர்ந்த 12 பேர் உயிரிழந்தனர் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

குஜராத் மாநிலம் மோர்பி நகரில் மச்சு ஆற்றின் குறுக்கே ஒரு தொங்கு பாலம் அமைக்கப்பட்டு இருந்தது.அந்த பாலம் சுமார் 100 ஆண்டுகள் பழமையானது. சிதிலம் அடைந்த அந்த பாலத்தை சீரமைக்கும் பணி கடந்த 6 மாதங்களாக நடந்து வந்தது. பணிகள் அனைத்தும் முடிவடைந்ததையடுத்து, மக்களின் பயன்பாட்டுக்காக குஜராத்தி புத்தாண்டு தினமான கடந்த 26-ந் தேதி பாலம் திறந்துவைக்கப்பட்டது.

இந்தநிலையில், விடுமுறை நாளான நேற்று மாலை 'சத்' பூஜைக்காக ஏராளமானோர் அந்த பாலத்தின் மீது குவிந்தனர். ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என ஏராளமானோர் திரண்டிருந்தனர்.அப்போது அவர்களின் எடையை தாங்க முடியாமல், பாலம் திடீரென அறுந்து விழுந்தது. இதையடுத்து, பாலத்தில் நின்று கொண்டிருந்த ஏராளமானோர் ஆற்றுக்குள் விழுந்தனர்.

இந்த பாலம் இத்தனைக்கும் சீரமைக்கும் பணிகள் முடிந்து சில நாட்களில் இந்த கோர விபத்து நடைபெற்றது தான் பெரும் துயரம். இந்த விபத்து குறித்து பல்வேறு புதுப்புது தகவல்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

பாலத்தின் கயிறை இளைஞர்கள் சில எட்டி உதைப்பதும் பாலத்தை பிடித்து ஆட்டும் காட்சிகளும் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன. பாலத்தில் கூடிய கூட்டத்தை கட்டுப்படுத்த அங்கு எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தெரிகிறது.

பாஜகவை சேர்ந்த மோகன்பாய் கல்யாண்ஜி குந்தாரியா, குஜராத்தின் ராஜ்கோட் தொகுதி எம்.பி.யாக உள்ளார். அவருடைய உறவினர்கள் மோர்பி கேபிள் பாலம் அறுந்து விழுந்த போது அந்த பாலத்தில் இருந்தனர். அதில் எம்.பி மோகன்பாய் குடும்பத்தைச் சேர்ந்த 12 பேர் உயிரிழந்தனர்.

இது குறித்து அவர் கூறியதாவது, "விபத்தில் ஐந்து குழந்தைகள் உட்பட எனது குடும்பத்தைச் சேர்ந்த 12 பேரை இழந்துவிட்டேன். மிகுந்த வருத்தத்தில் உள்ளேன்.எனது சகோதரியின் குடும்பத்தைச் சேர்ந்த குடும்ப உறுப்பினர்களை இழந்துவிட்டேன். இறந்தவர்களில் பெண்களும் குழந்தைகளும் அதிகம்.

இந்த சோக சம்பவம் எப்படி நடந்தது என்பது குறித்து விசாரணை நடத்தப்படும். இதற்கு காரணமானவர்கள் தண்டிக்கப்படுவார்கள். உள்ளூர் மக்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்" என்று கூறினார்.

Related Stories

No stories found.
X

Dailythanthi
www.dailythanthi.com